May 18, 2012

தேரையர்

                                   




 காசிவர்மன் என்று ஓர் அரசன். கடுமையான தலைவலியால் நிம்மதியை இழந்து விட்டான். அரண்மனை வைத்தியர்களால் அரசனின் தலைவலியில் அணுவளவைக்கூட குறைக்க முடியவில்லை. இறுதியாக, விஷயம் அகத்தியர் காதுகளுக்குப் போனது. தனது சிஷ்யர்களுடன் அவரும் காசிவர்மனைச் சந்தித்தார். உச்சந்தலையில், அதாவது கபாலத்தில் குடைச்சல் உள்ளது என்று காசிவர்மன் கூறியதை வைத்து, அவனது வியாதி தலைவலியில்லை என்பதை தீர்மானித்துவிட்டார். கபாலத்தில் குடைச்சல் என்றால் கபாலத்தைத் திறந்து பார்த்தால்தான் கண்டறிய முடியும். அனேகமாக கபாலத்தில் வெப்பவாயு,சமயங்களில் மேலேறி பின் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கேயே அடைந்து கிடக்கும். இதுகூட வலியாக வெளிப்படும். அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று அனுமானித்த அகத்தியர், காசிவர்மனின் கபாலத்தை ஒருவகை மெழுகைப் பயன்படுத்தி வலியே இல்லாமல் பிளந்துவிட்டார். உள்ளே பார்த்தவருக்கு, பலத்த ஆச்சரியம். காசிவர்மன் சுவாசிக்கும்போது காற்றோடு காற்றாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு தேரைக்குஞ்சு, மூளைவரை சென்று அங்கே அப்படியே பாறைத்தேரைபோல தங்கிவிட்டது. அதனுடைய அசைவுதான் காசிவர்மன் தலையில் வலியாக உணரப்பட்டிருக்கிறது. தேரையை வெளியே எடுத்து கபாலத்தை மூடினால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் தேரையோ, திறந்த கபாலம் வழியாக வெளிச்சம் பட்டதால் இறுகப் பிடித்துக் கொண்டது. அதைக் குத்தி வெளியே எடுக்கமுனைந்தால், மூளைத்திசுக்கள் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க என்ன வழி என்று தெரியாமல் அகத்தியர் தவித்தபோது, ஒரு சிறு பாத்திரத்தில் நீருடன் கபாலம் அருகில் வந்து நின்ற ராமதேவன், அந்த நீரில் அசைவை உருவாக்க... சிறிது நேரத்தில் தேரை மூளையை விட்டுவிட்டு அப்படியே தண்ணீர்ப் பாத்திரத்துக்கு தானாகத் தாவியது. அகத்தியரும் வேகமாக கபாலத்தை மூடி மெழுகிட்டார். சீடன் ராமதேவனின் இந்த சமயோசிதச் செயல், அகத்தியரை மகிழச் செய்தது. அதே சமயம், தேரையை வெளியேற்றுவதில் அகத்தியரிடம் பாராட்டுப் பெற்றதால், ராமதேவனும் தேரையர் ஆனார், அதன்பின் அகத்தியர் தன் ஆயுர்வேத வைத்யமுறை அவ்வளவிற்கும் அணுக்க சீடராக தேரையரைத்தான் கருதினார். இன்னொரு சம்பவம், தேரையரை வைத்ய சிரோன்மணியாகவே ஆக்கிவிட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது. அதை நீக்கும் வழிவகை தெரியாமல் வைத்ய உலகமே தவித்தது. தேரையர், அகத்தியர் ஆஸ்ரமத்தில் தற்செயலாக அதற்கான மருந்தைக் கண்டறிந்தார். மூலிகைச்சாறினை சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய போது அதன் ஆவி சட்டிக்கு நேர் மேல் உள்ள ஒரு வளைந்த மூங்கிலின் வளைமுனையில் பட்டிட, அந்த வளைந்த முனை பட்டென்று வளைவை விட்டு நேர்பட்டது. சப்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்த தேரையர், அதைப்பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார். மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும். இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின்போது மயானம்வரை வருவது மூங்கிலும்தான்... மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக்கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது. இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளைமூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத்தான் நிமிர்த்தாது? தேரையரும், காய்ச்சிய சாறினை பாண்டிய மன்னனுக்குப் பூசிட, அவனது கூனும் நிமிர்ந்தது. இதனால் அரசன், தேரையரை அகத்தியருக்குச் சமமாக பாவித்தான். இது, அகத்தியரின் மற்ற சிஷ்யர்களுக்குள் பொறாமையை மூட்டியது. அவர்களும் அகத்தியரிடம் கோள் மூட்டினர். அகத்தியரும் தேரையரை அழைத்து, ‘‘இனி உனக்கு என் தயவு தேவையில்லை’’ என்று கூறி, தனித்துச் செயல்படச்சொல்லி அனுப்பிவிட்டார். ஆலமர நிழலில் சிறிய தாவரங்களால் வளரமுடியாது. அதேபோல், தேரையர் தன் அருகில் இருந்தால் வளர முடியாது என்று அகத்தியரும் நினைத்தார். அவர் எண்ணியது மிகச்சரி. தேரையர் தனித்துச் சென்று பல அரிய மருந்துகளைக் கண்டறிந்தார். தன் முனைப்பை நூலாகவும் எழுதினார். பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத வைத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன. ஒருமுறை, வயிற்றுவலி வந்த ஒருவருக்கு அகத்தியர் கொடுத்த மருந்தாலும் குணமாகவில்லை. ஆனால் அதே மருந்தை தேரையர் கொடுத்திட, அவருக்கு குணமாயிற்று. அகத்தியரே, ‘இது எப்படி’ என்று கேட்டு குழம்பி நிற்க, ‘அந்த மருந்தை வாயில் உள்ள எச்சில் மற்றும் பற்களில் உள்ள பாஷாணங்கள் படாமல் வயிற்றில் செலுத்தியதால் வயிற்றுவலி குணமாயிற்று’ என்றார் தேரையர். அவரது இந்த நுட்பம் அகத்தியரை பெரிதும் பரவசப்படுத்திற்று. தேரையரின் புகழ், உலகம் முழுவதும் பரவிட திருவுளம் கொண்டார். அதற்கு ஏற்ப ஒரு காலமும் உருவானது. தேரையர், அகத்தியரைப் பிரிந்து நெடுந்தூரம் சென்று தாடியும் மீசையும் வளர்த்து முற்றாக உருமாறிவிட்ட காலம் அது. அகத்தியருக்கு திடீரென்று கண்பார்வை மங்கியது. அது எதனால் என்பது, திரிகாலஞானியான அகத்தியருக்கும் தெரிந்தது. பூமியில் மனிதப் பிறப்பெடுத்துவிட்டவர்களை பூமியின் வினைப்பாடுகள், கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல் விடுவதேயில்லை. அகத்தியரையும் ஒரு கர்மக்கணக்குதான் கண்ணொளியைக் குறைத்து தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரது தர்மக்கணக்கு, சீடன் தேரையர் வடிவில் அவரை ஆட்கொண்டது. அகத்தியர் பரிபூரண கண்ணொளி பெற ஒரு மூலிகை தேவை. அதை எவர் பறித்தாலும் அங்கே விஷப்புகை கிளம்பி, பறித்தவர் பார்வை பறிபோய்விடும். தேரையர், தன் குருநாதரான அகத்தியருக்காக தன் கண்ணை இழந்தாவது முயல்வாரா... இல்லை வேறு மார்க்கத்தில் செல்வாரா என்று அனைவரும் கவனித்தபோது, தேரையரும் அம்பிகையைச் சரண்புகுந்தார். அதுநாள்வரை இறைவேட்கையை சிறிதாகவும், மருத்துவச் சூரியனாவதை பெரிதாகவும் கொண்டிருந்த தேரையர், குருநாதருக்காக இறை வேட்கையைப் பெரிதாகக் கருதி அம்பிகையைச் சரண்புகுந்து தனக்கு உதவிடும்படி கண்ணீர் மல்கக் கேட்டார். அம்பிகையும் தேரையரிடம் அகத்தியருக்கான மூலிகையைத் தந்து ஆசிர்வதித்துச் சென்றாள். அதன்பின் அகத்தியரின் பார்வையும் முழுமையாகத் திரும்பியது. சீடன் தேரையரை கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினார். 
தேரையர் நூல்கள் :
 தேரையர் யமக வெண்பா
 தேரையர் தரு
 தேரையர் வெண்பா
 தேரையர் காப்பியம்
 தேரையர் அந்தாதி
 தேரையர் கரிசல்
 தேரையர் ம்காகரிசல்
 தேரையர் கற்பம்
 தேரையர் நிகண்டு
 தேரையர் நீர்க்குறி நெய்க்குறி நூல்கள்
 தேரையர் சேகரப்பா
 தேரையர் நாடகம்
 தேரையர் சிகாமணி வெண்பா
 தேரையர் மிகாவண்ணம்
 தேரையர் எதுகைப்பா
 தேரையர் நாண்மால

 தேரையர் தைலவர்க்கச் சுருக்க
 தேரையர் தினக்கிராமலங்காரம்
 தேரையர் சிகிச்சைக்கிரமம்
 தேரையர் நோய் மருந்தளவை
 தேரையர் பிரதானகுணமூலி தரு

 தேரையர் மருத்துவபாரதம்
 தேரையர் வைத்திய பள்ளு
 தேரையர் 500
 தேரையர் வைத்தியகாவியம் 1000
 தேரையர் 1500

No comments: