July 13, 2018

தமிழையும் வாசியையும் உருவாக்கியவர் சிவனே



இந்த பதிவின் நோக்கம் தமிழ்மொழியின் காலம் மற்றும் அதை உருவாக்கி உலகுக்கு அளித்தவர் யார்? என நூல்களின் ஆதாரங்களை கொண்டு விளக்குவதேயாகும்.

தமிழ் மொழியானது பல்வேறு சிறப்புகளை கொண்ட மொழியாகும் அம்மொழியை இந்த உலகிற்க்கு தந்தவர் சிவனேயாகும். அம்மொழியே உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்பதற்காண ஆதாரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை
                                   குமரகுருபரர் அருளிய காசிக் கலம்பகம்
மேலே சாதரணமாக தோன்றும் இரண்டு வரிதான் மிகபெரிய ரகசியத்தை எளிமையாக கூறுகிறது அதாவது இந்த உலகத்தை உருவாக்கியவனும் தமிழை தந்தவனும் சிவன் தான் என குமரகுருபர முனிவர் காசி கலம்பகத்தில் கூறுகிறார்.
செந்தமிழ்க் கலைநிலை சீர்நெறித் திருநெறி
                 ஐந்திறம் பாடல் எண்- 845
ஆடலான் நிலைகலை அருளியல் மூலம்
ஆடலான் நெறிக்கலை ஐந்தெழுத் தியல்நெறி
                 ஐந்ததிறம் பாடல் எண்-866
அதாவது ஆடலான் என்கிற சிவனின் அருளால் ஐந்தெழுத்தியல் பற்றிய நெறிகளை தெரிந்து செந்தமிழ் கலைநிலைகளை அறிவது திருநெறியாகும் அதை அருள்பவர் ஆடலான் என்கிற சிவனேயாகும்.
மேலும் இந்த உலகில் தோன்றிய முதல்மொழி தமிழ்மொழி என்பதை திட்டவட்டமாக மயன் முனிவர் தனது ஐந்திற நூலில் கூறுகிறார்.
தென்றிசை எண்டிசை மூலமென் றோர்ந்தே
தென்மொழி பன்மொழி மூலமென் றாய்ந்தே
நன்மொழி உயிர்குல முதன்மொழி தமிழென
             ஐந்திறம் பாடல் எண் -810
இந்த மொழி தோன்றிய இடம் குமரி நாடு என்றும் அந்நாட்டில் கிமு  பதினைந்தாயிரம் ஆண்களுக்கு முன்பே தேன்றி சங்கம் வைத்து தமிழ்நிலைகளையும் கலைகளையும் ஆக்கம் எய்தினர் என்கிறார் மயன் முனிவர் குமரி மாநிலம் என்கிற கடல்கொண்ட தென்னாட்டை பின்வருமாறு கூறுகிறார்

பைந்தமிழ்க் கலைநிலைப் பரப்பியல் ஓர்ந்தே
குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
                    ஐந்திறம் பாடல் எண் -812
    மாநிலம் என்பது மா(பெரிய)-நிலம்
தமிழும் சிவமும் ஒன்றென்பதை கீழே காணுங்கள் நண்பர்களே
இந்த அண்டமும் பிண்டமும் ஒன்று தான் என பல சித்தர்கள் கூறியுள்ளனர். இந்த அண்டம் பிண்டம் என்பது சிவன் நடத்தும் கலையே ஆகும்.இந்த கலையே எழுத்தாகும் இந்த எழுத்தே தமிழாகும். இந்த தமிழே சிவமாகும்.

எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்
                                    வான்மீகர் சூத்திரம்16ல் பாடல்-1
 ஆடலான் கலையே அண்டமும் பிண்டமும்
                 ஐந்திறம் பாடல் எண்-814
தோனுமடா சிவயோகம் வாசியோகம்
 தூக்கவென்றால் தமிழதுதான் வேணும் வேணும்
                   தேரையர் பூசா விதி பாடல்-69
வாசியோகம் சித்திக்க வேண்டுமானால் தமிழை அறிந்திருக்க வேண்டும் தமிழை அறியாமல் சிவத்தை அறிய முடியாது.ஆக வாசியோகம் பயிற்சி செய்யலாம், ஆனால் வாசி சித்திக்காது. கடைசிவரை பயிற்சி செய்து காலம் கழியுமே அன்றி அவருக்கு வாசி சித்தியாகாது அவரை அண்டினோர்க்கும் வாசி வராது அது கடைசி வரை பயிற்சியாக இருந்து முடிந்து விடும். ஆகையால் தமிழின் சூட்சமம் அறியாமல் பயிற்சி செய்வது என்பது, செய்யும் நபருக்கு முன்பிறவி புண்ணியம் இருந்தால் மட்டுமே வாசி கிட்டும் என சொல்லிவிடுதல் சிறப்பே.
சரி நண்பர்களே கீழே அடுத்த பாடலை காணுங்கள்

உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான்.
                   கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/அகத்தியப் படலம் பாடல் எண்-41

இப்பாடலில் சுடர்க்கடவுள் தந்த தமிழ் என கம்பர் நேரடியாகவே
கம்பராமயணத்தில் சிவன் தமிழ்மொழியை அகத்தியனுக்கு தந்தார் என அகத்திய படலத்தில் கூறுகிறார்.

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
                   
                     திருவாசகம் திருஅம்மாணை பாடல் எண்-10

இதில் இனிமையான தமிழை அளிக்கும் தென்பாண்டி நாட்டானே என மாணிக்கவாசகர் தனது திருஅம்மாணை பதிகத்தில் சிவபெருமான் தமிழ் அளித்ததை கூறுகிறார்.மேலும் சிவனை, தென்னாடுடைய சிவனே போற்றி என போற்றி திரு அகவலில் கூறுவதை கவனிக்கவும்

உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க

மாறனும் புலவரும் மயங்குறு காலை

முந்துறும் பெருமறை முளைத்தருள்வாக்கால்

அன்பின் ஐந்தினைஎன்று அறுபது சூத்திரம்

கடல் அமுது எடுத்து கரையில் வைத்துபோல்

பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி, மற்றவர்க்குத்

தெளிதர கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
                               
                            கல்லாடம் 3.ல் எண்10

மேற்கண்ட பாடலில் புலவர்களும் பாண்டியமன்னனும் அகத்தினை 
சார்ந்த இலக்கணத்தில் வியக்கும்படியாக அத்தமிழை திரட்டி நூலாக கொடுத்தவர் தென்னாடு என்கிற குமரிகண்டத்தில் வாழ்ந்த தென்தமிழ் கடவுள் என கூறுகிறார்.

மேலும் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் ஆராய்ந்தவர் நம் அங்கணார் என்ற சிவன் என்பதை சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்
சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
                                                        ----பெரியபுராணம்
இதன் மூலம் தமிழை சிவன் தான் இந்த உலகிற்க்கு தந்தார் என ஆதாரம் கொடுத்துள்ளேன்.மீண்டும் ஒரு அடுத்த தலைப்பில் சந்திக்கிறேன்
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி
வாழ்க வளமுடன்




January 10, 2018

தமிழர்களின் காலகணிதமும் தைதிங்கள் விழாவும் பாகம்-1



இன்றைக்கு தமிழர்களின் புத்தாண்டு, எது என்பது தான் பலபேரின் கேள்விகளாக இருக்கிறது. இதற்கு எளிய பதில் தமிழர்கள் அனைத்து மாதங்களையும் சிறப்பித்தனர். ஆனால், அதை இந்த மாதம் தான் ஆண்டின் புது வருடம் தொடங்கும் மாதம் என எங்கும் குறிப்பிடவில்லை. 

ஆனால் காலத்தை பிரித்த தமிழன் அந்தந்த காலத்திற்க்கு ஏற்ற பண்டிகைகளையும் விழாக்களையும் ஏற்படுத்தினான்.இதில் முக்கியமாக கருதவேண்டியவை மாதங்கள் பிறப்பில் தொடக்க நாளில் வருகிற விஷேசங்கள் இரண்டு மாதத்திற்க்கு மட்டுமே உள்ளது.

மேலும் அக்காலத்தில் ஆண்டு பிறப்பு என்பது ஆவணியின் தொடக்கத்தில் இருந்தது ஆனால் அது புத்தாண்டு என குறிப்பிடவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

நாம் தைதிங்கள், சித்திரைதிங்கள்,ஆவணிதிங்கள் இந்த மூன்று மாதங்களின் தொடக்கமும், ஆண்டின் தொடக்கம் என சொல்லப்பட்டாலும் சங்க இலக்கியத்தில் புத்தாண்டு என்ற ஒன்று இல்லை. ஆனால், இந்த மூன்று மாதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தது தைதிங்கள் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது

மேலும் இப்பொழுது தமிழருக்கான புத்தாண்டு தினம் தேவைப்படுமானால், அது எந்த மாதம் சரியாக இருக்கும் என விஞ்ஞான பூர்வமாகவும்,சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,சித்தர்கள் சொல்லும் கால விளக்கத்தின் மூலமாகவும் விரிவாகவும் மூன்று மாதங்களையும் காண்போம் இதோடு ஆங்கிலபுத்தாண்டையும் சேர்த்து காண்போம்.

இறுதியில் ஏன் எல்லோரும் தை திங்கள் தான் தமிழர் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென சொல்கிறார்கள் என நீங்களே புரிந்து கொள்வீர்கள். 

முதலில் விழா என்பதற்க்கும் பண்டிகை என்பதற்க்கும் விளக்கத்தை பார்த்து விட்டு பின் பதிவுக்குள் சென்றால் வாசகர்களுக்கு எளிதாக புரியும் என நினைக்கிறேன்.ஏனெனில் பண்டிகையும் இக்காலத்தில் விழா என்றே அழைகின்றனர்.

பண்டிகை என்பது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே கொண்டாடப்படுவது. அதாவது இக்காலத்தில் மக்கள் பல ஊர்களிலிருந்து வந்து ஓர் இடத்தில் குவிந்து அந்த நாளை ஒட்டி தனது பண்டங்களை ஒருவருக்கொருவர் கைக்கு கை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியாகும்.அப்போது அந்த இடமோ,காலமோ சார்ந்த பெயரால் இன்ன பண்டிகை என அழைத்து அந்த விஷேசத்தையும் சிறப்பாக செய்து முடிப்பர். இது ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் முடிந்துவிடும்.

விழா என்பது விழைந்து (விருப்பமாக) செய்வது என்று பொருள். அதாவது விருப்பத்தின் பேரில் குறைந்தது மூன்று நாள் முதல் ஒன்பது நாள் வரை செய்வது. மேலும் அரசாங்கமே அதிக தின்ங்கள் எடுத்து நடத்தும் விஷேசத்திற்க்கு விழா என அடையாளப்படுத்துவர்.  இதில் அதிகப்படியான மகிழ்ச்சி மற்றும் பண்பாடு,கலச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும். இந்த விழாவுக்கு தான் அரசாங்க விடுமுறை, வெளியூருக்கு சென்ற நபர்கள் வீடு திரும்புதல், விரும்பிய இடத்தில் குடும்பமாக உலவுதல் என அதிகபட்ச விஷேசங்கள் நடக்கும்.சுருக்கமாக சொன்னால் விழா என்பது அனைத்து நபர்களையும் மகிழ்ச்சிக்காக ஒன்றாக இணைக்கும் ஒரு விஷேசமாகும்.இதை பின் சங்க இலக்கியம் வாயிலாக தெளிவாக காண்போம்.

ஆண்டு பிறப்பு என்றால் எப்படி

ஆண்டு பிறப்பு என்று பொதுவாக சொல்லபடும் காரணம் இரண்டாக பார்க்கபடுகிறது. ஒன்று சூரியனை மையமாக வைத்து கணக்கிடுவது மற்றொன்று சந்திரனை மையமாக வைத்து கணக்கிடுவது.அதாவது இதை சூரிய நாட்காட்டி மற்றும் சந்திர நாட்காட்டி என அழைக்கிறோம்.

சூரியநாட்காட்டி

சூரிய நாட்காட்டி என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன்  பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். 

.
இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.

சந்திரநாட்காட்டி

சூரியன் சுற்றும் அதே நேரத்தில், பூமியை சந்திரன் சுற்றும் போது சந்திரன் (பூரணை)முழுநிலவு அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் (பூரணை)முழுநிலவு அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும். சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. 

பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த முழுநிலவுக்குள் (பெளர்ணமி) திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் (பூரணை)பெளர்ணமி என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.

மேலும் தமிழர்கள் பயன்படுத்தும் மாதபெயர்கள் அனைத்தும் சந்திரனை அடிப்படையாக வைத்து உருவானது என சங்ககாலத்தில் இருந்து தொடரும் ஒரு மரபாகும்

முதலில் நாம் காணபோவது ஆவணி திங்களும் ,சித்திரை திங்களும் பின் தான் தைதிங்கள் பற்றி கூறி, அது அக்காலத்தில் எப்படி எத்தனை நாள் கொண்டாடபட்டது என விரிவாக பார்ப்போம் 

ஆவணி,சித்திரை திங்கள் வேற்றுமை 

சித்திரைக்கு விளக்கம் தரும் நபர்கள் மேஷ வீட்டில் சூரியன் நுழையும் மாதம் தான் தமிழ்புத்தாண்டு என்கிறார்கள். 

ஒருவேளை சூரியனை மையமாக வைத்தாலும் சித்திரை தவறு என்று தான் அனைத்து பழைய நூல்களும் கூறும்.அதை விளக்கமாக காண்போம்.

காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”.

       ----------தொல்காப்பியம் (பொருளதிகாரம் அகத்திணையியல் ப.எண்- 6,7) 

இதற்கு நச்சினார்கினியர் பின்வருமாறு விளக்கம் கூறுகிறார் 

காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத்  தண்மதிக்கு உரிய கற்கடக வோரையீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார் தொல்காப்பியர்”,  என்கிறார் நச்சினார்க்கினியர்

இதை நமக்கு புரியும்படியாக ஜோதிட சாஸ்திரம் வாயிலாக கூறினால் சூரியனின் சொந்த வீடான சிம்மராசி மண்டலத்தில் தொடங்கி கடகராசிமண்டலம் முடிய ஓர் ஆண்டாகும் என நச்சினார்கினியர் கூறுகிறார்.

ஆனால் தொல்காப்பியர், காலத்தை பற்றி  கூறும்போது கார்காலம் என தொடங்குகிறார் கார்காலம் என்றால் ஆவணிதிங்களின் தொடக்கமாகும்.

காரே கூதிர் முன்பனி பின்பனி 
சீரிள வேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே.
                 
என்று அகப்பொருள் விளக்கமும் கார் காலத்தையே ஆண்டு பகுப்பின் முதலாக 
சொல்லியுள்ளது.

ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின
திங்கள் எண்ணினார் கொளலே

என தமிழிலேயே மிகவும் பழமையான நிகண்டான 
திவாகர நிகண்டும், ஆவணியை முதலாகக்கொண்டு ஆறும் பெரும்பொழுதுகளை பிரிக்க வேண்டும் என்று சொல்கிறது.

மருவும் ஆவணியே ஆதி மற்றிரண்டு மாதம் பருவம் 
மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்.

என 
சூடாமணி நிகண்டும், ஆவணியே முதல் மாதமாக சொல்கிறது.

ஆனால் மேற்கண்ட ஆவணிமாதம் ஆண்டின் தொடக்கமாக கூறினாலும் அந்த மாதத்தை பழந்தமிழர்கள் சிறப்பாக கொண்டாடவில்லை. ஏனெனில் உழவுக்காக அந்த மாதத்தில் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர், அதாவது ஆவணி புரட்டாசி மாதங்களில். ஆனால் ஆடியில் அதிக காற்றோட்டம் கண்டால் ஆவணியில் ஏமற்றம் வரும் மேலும்அது ஐப்பசியில் பெருமழையாக மாறும். இதனால் ஆவணியில் காத்திருந்தால் சில தடவை வானம் பொய்க்கும். இதனால் அந்த மாதத்திலும் மகிழ்ச்சிக்கு அதிக நாட்கள் கிடைக்கவில்லை. அதனால் ஆவணியை நம்பவில்லை அதை அப்படியே விட்டுவிட்டனர் நாமும் ஆவணியை அப்படியே விடுவோம்.

அப்படியானால் எப்பொழுதுதான் நாடே அதிக நாள் மகிழ்ச்சியாக விழா கோலம் பூண்டது என்றால், தைதிங்கள் மட்டுமே என்று, நான் கூறவில்லை இலக்கியம் மற்றும் சில நூல்கள் கூறுகிறது 

சித்திரை திங்களை பற்றி மறைமுகமான ஒரு கேள்வி ஒன்று இங்கு உள்ளது.

சித்திரைக்கான கேள்வி: 

சூரிய நாட்காட்டி படி புத்தாண்டு கூறுபவர் சூரியனின் சொந்தவீடான சிம்மராசிமண்டலத்தில் நுழையும் காலம் ஆவணிமாதமாகும் அதை கொண்டாடுவதை விடுத்து அயலார் வீடான மேஷராசியில் நுழையும் காலமான சித்திரையை கொண்டாடுவது ஏன்?

தமிழர்கள் சந்திரநாட்காட்டியை வைத்து விழாக்கள் எடுத்தனர் என்பதை  சோதிடநூல்களும் தமிழ் நூல்களும் செப்புகிறது

இருப்பினும் நக்கீரர் நெடுநல்வாடையில் மேஷம்(ஆடு தலை) என்கிறாரே என்றால் அது ராசி மண்டலத்தில் முதலாக மேஷம் உள்ளதை கூறுகிறாரே தவிர புத்தாண்டு தொடக்கம் மேஷராசி என கூறவில்லை

"திண் நிலை மருப்பின் ஆடு தலையாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து"
         ---நெடுநல்வாடை

சித்திரை புத்தாண்டு கொண்டாடுவதை வடநூல்கள் நிறைய சொல்கிறது இதற்கு வடநூல்கள் பல கதைகள் சொல்கிறது.ஆனால் அதை தமிழர்கள் ஏற்கவில்லை
மேலும் ஒரே காரணம் அவர்கள் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றிருப்பார் என்கிறார்கள். 

இதனால் பூமியில் வெப்பம் அதிகமாகி எவரும் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பார்கள். மேலும் சூரியனை வைத்து அந்த மாதத்தில் எந்த பண்டிகையும்,விழாவும் கொண்டாடுவதில்லை. சித்ரா பெளர்ணமி மட்டுமே அனைவரும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்

இன்னும் புரியும்படியாக சொன்னால் சித்திரையில் வெப்பம் காரணமாக குழந்தை பெறுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.மேலும் உச்சிவெயில் உங்கள் தலையை பிழந்தால் உங்களுக்கு இனிமையாக இருக்குமா? அதற்காக விழா எடுப்பீர்களா?கேட்பீர்களா?

நல்லது அடுத்து தைதிங்கள் எப்படி சிறப்பாக உள்ளது அந்த மாததில் என்னென்ன விஷேசங்கள் உண்டு அந்த மாதம் விழாவுக்கு எப்படி ஏற்ற மாதமாக இருக்கிறது. அதனால் எல்லோரும் ஏன் அதை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என கூறுகிறார்கள்.

மேலும் மாதங்களை பற்றி ஞானியரின் கூற்று என்ன என அடுத்த பதிவில் இன்னும் ஆழமாக காண்போம்

உங்கள் சித்தர் அடிமை 
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி
வாழ்க வளமுடன்