April 30, 2012

கஞ்சமலை சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம்

                                      

சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம் 

இது மலை அடிவாரத்தில் இருந்து 3650 அடி உயரத்தில் இருக்கிறது இங்கு செல்ல முதலில் 77  அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது இதை முதலில் தரிசனம் செய்து விட்டு பின் சிறிது தூரத்தில் நாகதேவி சிலை உள்ளது இங்கு மஞ்சள் குங்குமம் இட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் அதன் பிறகு அடிவாரத்தில்  கஞ்சபெருமாள் என்கிற தசாவதார பெருமாள் கோவில் இருக்கிறது.  இங்கிருந்து தான் பாதை தொடங்குகிறது இங்குள்ள கருப்பு நிற பைப் தொடர்ந்து சென்றால் சஞ்சீவி லிங்கத்தை காணலாம் அது அங்குள்ள ஊற்று நீரில் இருந்து வருகிறது பைப்யின் மூலம் ஊற்று நீரை கீழே கொண்டுவருகிறார்கள். மேலும் அது சற்று கடினமான பாதையாக உள்ளது மேலும் சிறுவர்கள் பெண்கள் செல்லுவது மிக கடினம் ,பாதை செங்குத்து மேடுபோல் உள்ளது விட முயற்சி உடன் செல்ல வேண்டும் முதலில் பாம்புகள் உள்ளபகுதி வரும் பின் மாட்டு எலும்பு பகுதி அதன் பின் ராமர் கொடிமரம் இங்கிருந்து பார்த்தால் சஞ்சீவி மேடு தெரியும் இங்கு தான் ஐயன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார் இவரை நேரில் தரிசனம் செய்து விட்டால் கைலாயத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் இது உண்மை இதை சுழுமுனை சித்தர் கூறுகிறார். இதன் பாதை மற்றும் படங்கள் உங்கள் பார்வைக்கு 
77  அடி ஆஞ்சநேயர்  
நாகதேவி 

தசாவதார பெருமாள் 

மாட்டு எலும்புடன் எனது நண்பர் 
சஞ்சீவி மேடு 

பாம்புகள் உள்ளபகுதிசஞ்சீவி லிங்கம்


சஞ்சீவி லிங்கத்தை தரிசனம் செய்து இன்புற்று வாழ்வீர்களாக ஓம் சிவாய நம:April 17, 2012

கஞ்சமலை சடையாண்டி சித்தர்

                                          

சித்தர் குகை 

சடையாண்டி சித்தர் 

சடையாண்டி சித்தர் கோவில் 
                                      


சடையாண்டி முக்தி அடைந்த இடம்
சடையாண்டி ஊத்து 


சடையாண்டி சித்தர் என்பவர் இந்த பகுதியில் மாடு மேயித்துகொண்டிருந்த ஒரு நபர். இவர் இங்குள்ள ஊற்றுக்கு பக்கத்தில் உள்ள சிவன் சிலைக்கு வழிபாடு நடத்திவந்தவர்  .சப்த கன்னிமார்கள் மாடு மேய்க்கும் பெண்களாக வந்து ஒரு நாடகம் நடத்தி அதன் மூலம் முக்தியும்  அளித்தனர் . ஒரு நாள் இவர் இங்கு மாடு மேயித்துக்குகொண்டிருக்கும் போது,  ஏன் இங்கு நீங்கள் பெண் தெய்வத்தை வழிபடவில்லை என்று ஒரு பெண் கேட்டாள் அதற்க்கு பெண் துணை எனக்கு தேவையில்லை என்று சொன்னார் , இன்னொருபெண் நாங்கள் இல்லாமல் நீங்கள் பிறக்கவும் இல்லை, மணக்கவும் இல்லை,துறக்கவும் இல்லை, இப்படி எல்லா விதங்களிலும் உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்றாள் இதை கூர்ந்து கவனித்த  பின் தன் தவறை உணர்ந்தார். இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லை யார் அம்மா நீங்கள் என்று கேட்டார் உடனே தன் சுயஉருவிற்கு வந்து  பின் அவருக்கு ஆசிகள் வழங்கினர்   இப்போது சிவபெருமான் ஆணையை ஏற்று  உனக்கு முக்தி வழங்க போகிறோம் என்று சொல்லி உடனே மறைந்தனர். அவருக்கு ஒன்றும் புறியவில்லை பின் கீழ் நின்றுகொண்டுயிருந்த மக்கள் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்களை காணவில்லை இவன் தான் மறைய வைத்து விட்டான் என்று சடையாண்டியை  துரத்தினர் அவர் இங்குள்ள ஊத்துக்குள் தன் மாடுடன் சென்று மறைந்துவிட்டார் (முக்தியடைந்துவிட்டார் ) அன்று முதல் இந்த ஊத்து சடையாண்டி ஊத்து என்று அழைக்கப்படுகிறது   இந்த ஊற்று வற்றாமல் இன்றும் வந்துகொண்டிருக்கிறது மேலும் இதில் குளித்தால் பிணிகள் அகலும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை                                                       

April 11, 2012

கஞ்சமலைச்சித்தர்

                                    கஞ்சமலை 

சித்தர் குகை 

அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில் இருந்து எடுக்கப்பட்டது 


தானான கஞ்சமலை நடுவிலேதான் 
சதிரான கரும்பாறை யதர்க்குமேலே 
தோணாது அதினில் ஒரு குகைதானுண்டு 
துவார  மென்ன இடிகிணறு போலேகாணூம் 
காணாத இடிகிணற்றின் பாகந்தனில்
கருவனான வாசலுண்டு உள்ளே சென்றால்
கோணாத வட்டமாங்  குகை மேலாக 
கொடுவளைமேல் பரணியுண்டு கூர்ந்துபாரே 

கூர்ந்துபா ரப்பரணி தன்னிலேதான் 
குருவான செந்தூர மெழுகுபற்பம்
சார்ந்துபார் தைலமொடு உதகஞ்செயநீர் 
சங்கையில்லா குப்பிகளில் மெத்தவுண்டு 
சேர்ந்துப்பார்த் ததைஎடுத்துத் தவசுபண்ணி  
சிவயோகத் தில்தோணச் சேந்துநில்லு 
ஆயிந்துஅந்தச் சரக்குவைப்பு கஞ்சமலைச்சித்தர்
அன்புவைத்துச் செய்தமுறை அறிந்துபாரே   
                                                                       
                                                                (அபபூ-1200    197 , 198 )

இந்தகுகை காலங்கிசித்தர் வாழ்ந்தகுகையாகும்  

கஞ்சமலை சுழுமுனை சித்தர்

                                   கஞ்சமலை 

சுழுமுனை சித்தர் குகை கோரக்கர் மலைவாகடம் 

கேளுங்கள் முனிவரே, அந்த கருங்கானலுக்கு வடமேற்கு மூலையில் கஞ்சமலை இருக்கிறது அந்த மலை மேலேறிக் கூப்பிடும் தூரம் போனால் அங்கே மணலுற்றும் அவ்வுற்றுக்குத் தென்பக்கமாக சுழுமுனை சித்தர் குகையுமிருக்கிறது. அந்த குகைக்கு நேர் கிழக்காக அரை நாழிகை தூரத்தில் 
காளி கானல் இருக்கிறது அக்கானலுக்கு மேல்புறம் இருக்கும் மூங்கில் வனத்தில் வடபக்கமாக அரை நாழிகை தூரம் போனால சிற்றாறு வருகிறது அந்த ஆற்றுக்கு கீழ்புறமாக இருக்கும் சுனைக்கு அம்பிடும் தூரத்தில் ரோமவிருச்சம் உள்ளது ,                                                                       (191 )


என்று கூறுகிறார் இதன் மூலம் சுழுமுனை சித்தர் குகை அறியமுடிகிறது ரோமவிருச்சம் இருக்கும் இடமும் தெரியவருகிறது 

April 9, 2012

கஞ்சமலை அங்கவை சங்கவை திருமணம்

                                      கஞ்சமலை 

அங்கவை சங்கவை திருமணம் 
 மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர்.போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.


பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர்
விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம் என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.


அதன் பின் பார்ப்பனர் அவ்வையிடம் சென்றார். பின் இவர்களை காக்கும் பொருட்டு அவ்வை இந்த மலையில் உள்ள குகை ஒன்றில் தங்கினார். இங்கு தான் அங்கவை சங்கவை வாழ்ந்தனர் .ஒரு நாள் மலையமான் மகன் தெய்வகன்(தேவகன்) இந்த மலைப்பகுதியில் வேட்டையாட செல்லும் போது இவர்களை பார்த்து காதல் கொண்டு காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். பின் தன் தந்தையுடன் வந்து பெண் கேட்டு மணம்  புரிந்தான் இவர்கள் முறைப்படி மணம் புரிந்தது மணப்பூண்டி (திருமணபூண்டி) என்னும் ஊர் ஆகும் 

கஞ்சமலை அதியமானும் நெல்லிக்கனியும்

                                       கஞ்சமலை 

அதியமானும் நெல்லிக்கனியும்


இவர் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய 
புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. 
திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன

அதியமான்  ஒளவையாரிடம்  கொண்ட  அன்பினை  எடுத்துக்  காட்டும்  நிகழ்ச்சிகளிலேயே  மிகச்  சிறந்த  நிகழ்ச்சி  ஒன்று  உண்டு.  அதுதான்  நெல்லிக்கனி  அளித்த  செயல்.  அதியன்  மிகவும்  பாடுபட்டுப்  பெற்றது   கரு நெல்லிக்கனி.  அதனை  உண்டவர்  நீண்ட  நாள்  வாழ்வார்கள்  என்னும்  சிறப்பினைப்  பெற்றது  அக்கனி.  அத்தகு  கனியைத்   தான்  உண்ணாது  ஒளவைக்குக் கொடுத்தான்  அதியன்.

அது இந்த மலையில் உள்ள கரும்பாறை பகுதியில் இருந்து 

எடுக்கப்பட்டது

April 6, 2012

கஞ்சமலை கரடி சித்தர்

                                 கஞ்சமலை 

கரடி சித்தர் 
கரடி சித்தர் என்பவர் காலங்கிநாதர் தான். அவர் இந்த பகுதியில் கரடி உருவம் எடுத்து அடிக்கடி இங்கு உலவிக்கொண்டு இருப்பார்.  இந்த ஊரையாண்ட சிற்றரசனின்  மகள் ஒரு ஏழையை விரும்பினால்,அதனால்  அவன் மகளை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து தரமுடியாது என்பதற்காக அவனை இந்த பகுதியில் உள்ள புலியை வேட்டையாடினால் தன் மகளை திருமணம் செய்து தருவதாக  வாக்களித்தான். அதற்கு சாச்சியாக அங்கு உலவிகொண்டிருந்த கரடியை பார்த்து இது தான் சாச்சி என்றான் . கரடி வந்து சாச்சி சொல்லாது என நினைத்து கூறினான். சொன்னபடியே  புலியை வேட்டையாடி வெற்றி கொண்டான்.ஆனால் மன்னன் தன் மகளை தர முடியாது என்றன். இதற்கு யார் சாச்சி என்று கேட்க ஏழை அதிர்ந்து போனான், உடனே நான் தான் சாச்சி என்றது ஒரு குரல்  பார்க்க ஜடாமுடியுடன் ஒரு முனிவர் .யார் நீ என்றார் அரசர், நான் தான் காலங்கி இந்தமலையை  வளம் வருபவன்.  நீ சாச்சியாக கூறியபோது நான் கரடி உருவில் இருந்தேன் என்றார். உடனே கரடியாக உருமாறினார் பின் மன்னன் மனம் வருந்தி தன்  மகளை ஏழைக்கே மனம் முடித்துவைத்தான் அன்று முதல் இவரை  அங்கு கரடி சித்தர் என்று எல்லோரும் அழைத்தனர் மேலும் இவரை கஞ்சமலையான் என்றும் அழைப்பர்  
   

April 4, 2012

கஞ்சமலை காலங்கிநாதரின் குருபக்தி

                                           கஞ்சமலை

 காலங்கிநாதரின் குருபக்தி


காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

"கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள்

மேலும் இவர் கரடி சித்தர் என்றும் கூறுகின்றனர் 
அதை நாளைய பதிவில் காண்போம் 

April 3, 2012

கஞ்சமலை

                                             கஞ்சமலை ஒரு அறிமுகம் கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை.
இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும்
இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர்,அகத்தியர்,கோரக்கர்  ஆகியோர் வாழ்ந்த மலையாகும்
மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும் அது பற்றி இனி நாம் பர்க்க போகிறோம். பலரும் கொல்லிமலை,கல்வராயன்மலை,பர்வதமலை,பொதிகைமலை,சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை அதனால் இதன் சிறப்புகள்,அமைவிடம்,வரலாறு,மூலிகைகள் ஆகியவற்றை பற்றி
கூறுகிறேன் இதில் தவறு இருப்பின் தாங்கள்  தாராலமாக சுட்டிகாட்டலாம் மேலும் சித்தர்கள் ஆசிர்வாதத்துடன் இதை பதிவு செய்கிறேன்

இதன் சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்

  காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர்  கண்டது இந்தமலையில் தான்

 அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான், அது விளைந்த இடமும் இங்கு தான்

 அங்கவை,சங்கவை திருமணம் நடந்ததும்,

 அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்

 சிவனும்,பெருமாலும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும்.

 சுலுமுனை சித்தர் குகை,  அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது

சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது


 இனி இதன் சிறப்புகள் விரிவாக அடுத்தடுத்த பதிவில் கண்போம்