February 18, 2014

மனம்

மனதை அடக்குவது என்பது இயலாத காரியம். அதன் வேகத்தை திசை திருப்புவது அல்லது அதன் நோக்கத்தை மாற்றுவது என்று சொல்வார்கள். சிலர் மனதை குதிரை என்பார்கள்.சிலர் குரங்கு என்பார்கள். சமீபத்தில் சதுரகிரிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு வைத்தியர் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக் குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளும் என்றார். எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஒருவாரமும் அது தவம் செய்யும் என்றார். இந்த தகவலைப் பற்றி எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கபும் என்றாரே அதுதான் எனக்கு பேரதிசயமாகப்பட்டது. 
சித்தர்களும் நம் மனமாகிய குரங்கை வெளியே இறக்கி வைத்து, வெளியில் இருந்து தன்னை பார்க்கும் தியான முறையை குருமூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். 

அப்படிப்பட்ட ஒரு ஐந்து தியான முறைகளைப் பற்றி பார்ப்போமா. 
கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி . இது ஏதோ இனிப்பு வகைகளின் பெயரோ அல்லது இடத்தின் பெயரோ, நடிகையின் பெயரோ அல்ல இதுதான் அந்த தியான முறைகளின் பெயர். 

1 - கேசரி
- யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது.

2- பூசரி
- இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது.

3 - மத்திய லட்சணம்
- இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 

4 - ஷண்முகீ
- இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும்.

5 - சாம்பவி
- சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும்.
இந்த சகஸ்ராரமே பிந்துஸ்தானம்.இதையே தேவலோகம் என்று சித்தர்கள் மறைபொருளாகக் கூறுவார்கள். இங்குதான் சோம்பானம் என்னும் தேவாமிர்தம் சுரக்கின்றது. கோவில்களில் தீர்த்தம் வழங்கப்படுவது இது சுரப்பதை நினைவில் கொள்ளவே. பெரிய கோவில்களில் ஏழு பிரகாரங்கள் வைத்துக் கட்டப்படுவது, மனித உடலில் உள்ள முக்கியமான ஏழு ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவே. இதெல்லாமே நமக்கு சித்தர்கள் அருளியது.

மிக்க நன்றி  :   Vel MuruganRs Av 

தியானம்

தியானம்

தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைப் பொருத்த வரை ஆசனம் முக்கியமாக கருதப்படுகிறது. ஆஸ் என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததே ஆசனம். ஆஸ் என்றால் அசைவற்று என்பது பொருள். உடல் அசைந்தால் பிராணன் அசையும், பிராணன் அசைந்தால் எண்ணங்கள் அசையும், எண்ணங்கள் அசையாமல் மனம் ஒருநிலையில் குவிந்திருக்க வேணடுமென்றால் உடல் அசையாமல் கற்சிலைபோல ஒரு ஆசனநிலையில் இருக்க வேண்டும். பதஞ்சலி முனிவர் தன் யோகசூத்திரத்தில் ''ஸ்திர ஸுகமாசனம்'' என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனால் ஹடயோக நூல்கள் பெரும்பாலும் வஜ்ராசனம், பத்மாசனம், சித்தாசனம் போன்ற சில குறிப்பிட்ட ஆசனங்களை சிபாரிசு செய்கின்றன. அதேபோல வெறும்தரை, பாறை, கோரைப் பாய், பிளாஸ்டிக் பாய், இரும்பு நாற்காலி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவைகளால் மின்காந்த இழப்பு ஏற்பட்டு, நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாவதுடன், மன உற்சாகம் குறைவுபட்டுப் போகும். தியானத்தில் முன்னேற முடியாது. தரைமேல் தர்ப்பை பாயை விரித்து, அதற்கு மேல் சருமத்தைப் போட்டு, அதற்கு மேல் ஒரு துணியை மடித்து விரித்து அமர்ந்து தியானம் செய்வது நல்லது. தர்ப்பை மின்காந்த ஆற்றலை விரையமாகாமல் காப்பதுடன், கண்ணுக்குத் தெரியாத சில கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.
தியானம் செய்யும்போது நேராக நிமிர்ந்து உட்காருவதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தினால் இரத்தம் முதுகு வழியாக மூளையைச் சென்றடையும். இதனால் பல நன்மைகள் விளையும். நிமிர்ந்து அமராவிட்டால் இரத்தம் தடைப்படும்.தியானத்தில் முன்னேற்றம் காணமுடியாது. மார்பு நேராக இல்லாததால் மூச்சு அடங்காது. இதனால் பிராணவாயு குறைபாடு ஏற்பட்டு மனம் அலைபாயத் துவங்கும். நேராக அமராமல் எத்தனை ஆண்டுகள் தியானம் செய்தாலும், குண்டலினி சக்தியானது மேல்நோக்கி உயர் மையங்களுக்குச் செல்லமுடியாது. அதுபோல புருவ நடுவையோ, மூக்கு நுனியையோ பார்த்து கண்கள் அசையாமல் இருந்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். சுவாசம் கட்டுப்படும். ஆக்கினையில் ஆற்றல் அதிகரிக்கும். மனோசக்தி பெருகும்.மூலாதாரத்தில் பிராண போக்குவரத்து அதிகரிக்கும்.
                            

சாம்பவி,அகோசரி முத்திரை

 புருவ நடுவை பார்த்தபடி செய்யும் பயிற்சி சாம்பவி என்றும், மூக்கு நுனியை பார்த்தபடி செய்யும் பயிற்சி அகோசரி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. அது போலவே சின்முத்திரை முழங்கால்கள் மேல் வைத்து தியானம் செய்தால், இருதயம், நுரையீரலின் வேகமான இயக்கம் சமன் செய்யப்படும். மூச்சின் வேகமும் சமன்படுவதால் தியானம் எளிதில் வசப்படும். 
இடதுகை கட்டைவிரல் மூளையின் வலது அரைக்கோளத்தோடும், வலதுகை கட்டைவிரல் மூளையின் இடது அரைக்கோளத்தோடும் தொடர்பு உடையது. சின்முத்திரையில் ஆள்காட்டி விரலால் கட்டைவிரலின் அடிப்பகுதி நன்கு அழுத்தப் படுவதாலும், இரண்டு விரல்களும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாலும் மூளையின் இரு அரைக்கோளமும் மின்காந்தசக்தியால் தூண்டப்படுகிறது. உடலின் இருபக்க இயக்கங்களும் சமன்படுத்தப்பட்டு மனம் எளிதில் உள்முகமாகப் பயணிக்கிறது.

வஜ்ராசனம்

அடுத்து வஜ்ராசனம், எல்லா மதத்தினரும் பிரார்த்தனையின் போதும், தியானத்தின் போதும் இந்த ஆசனத்தை கைகொள்வதைக் காணமுடியும். இந்த ஆசனத்தை செய்வதால் இடுப்புவலி, இடுப்பு சந்து வாதம், மூலம் போன்ற வியாதிகள் தீரும். இடுப்பிலிருந்து பாதம் வரை செல்லும் வஜ்ரநாடி அழுத்தப்படுவதால் இந்த ஆசனத்தை வஜ்ராசனம் என்று அழைக்கிறார்கள். இந்திரன் கையிலுள்ள வஜ்ராயுதத்தைப் போன்ற பலத்தை இது உடலுக்கு கொடுக்கும். வஜ்ரநாடி காம உணர்வோடு தொடர்புடையது. அது அழுத்தம் பெறுவதால் காம உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விந்து சக்தியை ஓஜசாக மாற்றி மூளைக்கு அனுப்பி வைக்கிறது. மனம் புலன்வழி போகாமல் உள்முகமாக பயணிப்பதை ஐந்து நிமிட வஜ்ராசனப் பயிற்சியின் போது உணர முடியும். இல்லறத்தார், துறவறத்தார், பிரம்மச்சாரி என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆசனத்தை கைகொள்ளலாம்.

பத்மாசனம்

பத்மாசனம் என்பது உடலை முக்கோண வடிவமாக்கி செய்யப்படும் ஒருஆசனம். அதாவது முக்கோணம்(பிரமீடு) வடிவமானது புறஉலக மின்காந்த சக்தியை ஈர்த்து தன்னுள்ளே அடக்கி வைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
 பாரதநாட்டு யோகிகள் உடலை முக்கோண வடிவில் வைத்து பிரபஞ்ச பிராணசக்தியை உச்சந்தலை வழியாக ஈர்த்து முதுகெலும்பு வழியாக உடலெங்கும் செலுத்தி தியான ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் ஆசனமே பத்மாசனம். உள்ளங்கால்கள் இரண்டும் தொடைமேல் விரிந்த தாமரைபோல காணப்படுவதாலும், நான்கு இதழ்கொண்ட தாமரை வடிவிலான மூலாதாரச் சக்கரத்தை இந்த ஆசனம் மலரச் செய்வதாலும் பத்மாசனம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலாதாரத்திலிருந்து பிராணசக்தியை நேரடியாக சகஸ்ராரத்திற்கு செலுத்த வல்லது. இந்த ஆசனத்தில் சக்கரங்களை நினைத்து செய்யும் பயிற்சியில் விரைவாக குண்டலினி மேல்நோக்கி பரவும். அனைத்து தரப்பினரும் இந்த ஆசனத்தை செய்து பயனடையலாம்.

சித்தாசனம்

சித்தாசனம், இது மூலாதாரம், சுவாதிஷ்டானம் சக்கரங்களை விரைவில் விழிப்படையச் செய்யும். குண்டலினி மிக விரைவாக மேலெழும்ப உதவுவதால் யோக சாஸ்திரங்கள் இந்த ஆசனத்தை வெகுவாக புகழ்கின்றன.சித்தா என்றால் பரிபூரண நிலை அல்லது சித்தி அடைந்தவர் என்று பொருள். இந்த ஆசனத்தில் அமர்ந்துபயிற்சி செய்பவர்கள் மிகவிரைவில் அனைத்து சித்திகளையும் அடைவதால் சித்தாசனம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் பிறப்புறுப்பின் கீழ் வைக்கும் குதிகால் மூலாதாரத்தை தூண்டுகிறது. பிறப்புறுப்பின் மேல்பகுதியில் வைக்கும் மற்றொரு குதிகால் சுவாதிஷ்டானச் சக்கரத்தை தூண்டுகிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானச் சக்கரங்கள் உள்ள பகுதி நன்கு அழுத்தப்படுவதால், காமத்தை தூண்டும் நரம்புகளில் இருந்து நேரடியாக பிராணசக்தி முதுகின் வழியாக மூளைக்குச் செல்கிறது. அங்கு சென்ற பிராணசக்தியானது நரம்பு மண்டலம் முழுவதும் பரவி நரம்பு மண்டலத்தை அமைதியடையச் செய்கிறது. ஆண், பெண் பிறப்புறுப்பின் சுரப்பிகள் கட்டுப்படுத்தப்பட்டு பிரம்மச்சாரியம் காக்க உதவுகிறது. மூளை, மூளையிலுள்ள ஹைபோதாலமஸ், பீனியல், பிட்யூட்டரி உள்ள பகுதிகளில் இயக்கம் சிறப்படைவதால் கோபம், காமம் போன்ற உணர்வுகள் கட்டுக்குள் வருகின்றன. இந்த ஆசனம் பிறப்புறுப்பின் வீரியத்தை கட்டுப் படுத்துவதால் இல்லறத்தார் அதிகநேரம் இந்த ஆசனத்தில் நிலைத்திருக்கக் கூடாது. அது அவர்கள் தாம்பத்ய வாழ்வுக்கு பாதிப்பைத் தந்துவிடும். பிரம்மச்சாரிகளுக்கும், துறவறத்தாருக்கும் இது உகந்தது. 

                                    வாழ்க வளமுடன்.

-      நன்றி : Vel Murugan.