December 24, 2016

ஐம்பொன்னின்(பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்

ஐம்பொன்னின் சூட்சம ரகசியங்கள்

(தமிழ்மொழி ஒரு தந்திரமொழி தொடர் பதிவுகளை அடியேன் இன்னும் எழுதிகொண்டு உள்ளதால் அதை முடித்தவுடன் அல்லது கூடிய விரைவில் நிச்சயம் பதிவு செய்யபடும்.தங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பர்களே)


தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.

ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்


இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனிகிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர(வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும்,சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.

நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்

இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.

ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்

தங்கம்

தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்.

கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை.இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.

வெள்ளி

வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை  கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது சூட்சமம்.


செம்பு

செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது.

இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,மூளையின் செயல் திறன் அதிகமாகும்.


இரும்பு

இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.

இதன் சூட்சம ரகசியம்


இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வைஎன்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்


ஈயம்

இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.

இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.


இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும். இதன் விலையும் மலிவாக தான் உள்ளது.


இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.

வாழ்க தமிழர்கள் விஞ்ஞான முறையும், சித்தர்களின் ரசாயனவியலும்

மீண்டும் அடுத்த ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி
வாழ்க வளமுடன்    
 

  


  

October 15, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-19


தமிழே ஒரு தந்திர மொழி ஆய்வு – 1

நமது மொழியே ஒரு மந்திரமொழி எனபதை கூற முற்படுகிறேன். இதில் அறிவியல் நூல்கள்,சித்தர் நூல்கள்,இலக்கண நூல்கள்,சங்கநூல்கள் என அனைத்தையும் அடிப்படையாக வைத்து, *பவானி சங்கமேஸ்வரர் அருளாலும் மற்றும் குருவருளாலும் கூற முற்படுகிறேன்.*

மந்திரம் என்பது மனோசக்தியோடு பயணிக்க கூடிய ஒலியலைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் குறிப்பாக சில வார்த்தைகள் மட்டும் தான் மந்திரமாக சில மொழிகளில் உள்ளது.

இதற்கு காரணம் அம்மொழியின் இலக்கண கூறும், இசைகூறும் இணைந்து வராததால் தான் என்கிறார்கள்.இந்த இரண்டும் தமிழில் எல்லா எழுத்தோடும் இணைந்து வருவதால் தமிழ் மொழி மந்திரமாக உள்ளது.

ஏனெனில் தமிழ் எழுத்துகள் உயிரோடும், உடலோடும், பிராணனோடும்,இயற்க்கையோடும் இணைந்து பயணிப்பதால் தான் ஒவ்வொரு எழுத்தும் *மந்திர வித்துகளாக* உள்ளது.

உயிர் எழுத்துகள் பற்றிய பதிவை நாம் ஏற்கனவே கண்டோம் ஆதலால் அது எப்படி புலவர்களாலும் சித்தர்களாலும் மறைமுகமாக வெளிபட்ட்து என்பதை காண்போம்.

மந்திரம் என்ற சொல்லை நேரடியாக ஒரு சில இடங்களில் சித்தர்கள் மறைமொழி,பரிபாஷை என்பார்கள். புலவர்கள் சூத்திரம்,நூன்மரபு,இலக்கணம்,மறைமொழிதல் என்று கூறுகிறார்கள். எல்லாம் ஏறக்குறைய ஒரே அர்த்தம் தான். ஆனால் கூறப்படும் சொல் பல அர்த்தம் கொண்டவையாக இருக்கும்.

இந்த மொழி மந்திரமாக சித்தியாக, முதலில் வாசி யோகம் சித்தியாக வேண்டும். வாசி சித்தியாக தமிழ் மொழி தெரியவேண்டும் இரண்டும் பிணைக்க பட்டுள்ளது.

வரலாற்றில் வாசியோகம் செய்யாமல் இயற்கையாக தமிழ் மொழியே வாசியாக சில புலவர்களிடத்திலும் பெண்களிடத்திலும் மந்திர வேலைகளை செய்துள்ளது. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள் அதை அவரவர் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன்.

கூறுகிற மந்திரங்கள் எல்லாம் சித்தியாக மெய்பொருளில் மனம் நின்று கூறினால் மந்திரம் என்கிற மொழி அனைத்துமே வேலை செய்யும் என்கிறார் அகத்தியர்.

பூரணகாவியம் ஆயிரத்தில் கண்டமணிச் சருக்கத்தில்48 வது பாடலில் மந்திரம் பற்றி கீழே

"உருவான செயலறிந்து உருவேசெய்தால்
…………………………………………………
கருவான முதலெழுத்தும் யீரெழுத்துங்
கண்டுமனங் கொண்டுறுதி கனிவாய்நின்றால்
குருவான பதியில் மனங்கூர்மையாகி
கூறுகிற மந்திரங்கள் சித்தியாமே"

இப்படி மனம் கூர்மையாக்கி கூறினால் மொழிகின்ற வார்த்தை மொழிந்த வேலையை செய்யும் என்கிறார் அகத்திய சித்தர்.

சரி அடுத்து புலவர்கள், மந்திரம் பற்றி என்ன சொல்கிறார் என அதையும் தெரிந்து கொள்வோம் கீழே;

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப”
               தொல்காப்பியம்-பொருளதிகாரம்- பாடல் 480

அதாவது நிறைமொழியினையுடைய மனிதர்கள் ஆணையால் வெளிபடும் மறைமொழி தான் *மந்திரம்* என்கிறார் புலவர்.

இப்படி வெளிப்படும் வார்த்தை சரியான உச்சரிப்பு இலக்கண முறை ஆகியவற்றை கொண்டு ஒருவரை செயலிலக்க செய்யமுடியும். இதை இலக்கணத்தில் எங்கு வைத்தார்கள் என்றால் அகத்திணை, புறத்திணையில் வைத்தார்கள்.

இலக்கண நூல்கள் எல்லாமே மறைமுகமாக பல விடயங்களை கூறுகிறது. ஆனால், எல்லாம் பாடல்கள் வடிவிலேயே இருந்து காண்பதால் அதன் சூட்சமம் வெளிப்படுவதில்லை.

அதனை வாசியோக நிலையில் இருந்து மெய்பொருளில் இருந்து, காணததால் அது சாதரணமாக பேசும் மொழியாகவே இன்றைய காலத்தில் பயன்படுகிறது.

ஒரு சூத்திரம் என்பது அதாவது ஒரு சொல்லானாலும் சரி ஒரு வரியானாலும் சரி அது பத்து குற்றமும்(10) இல்லாமல் முப்பத்திரெண்டு(32) உத்திகளோடு கூட்டி சொன்னால் தான் நூல் என ஒத்துகொள்வார்கள்.நமக்கு இங்கு ஒரு உத்தியோடு பொருள் சொல்லுவதே பெரிய விடயமாக உள்ளது.

கீழே தொல்காப்பிய புலவர் பாடலை காண்போம்.

ஒத்த *சூத்திரம்* உரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
*ஈரையுங் குற்றமும்* இன்றி நேரிதின்
*முப்பத் திருவகை உத்தியோடு* புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்
             தொல்காப்பியம் – பொருளதிகாரம் – மரபியல் பாடல்-644

ஆக சித்தர் பாடல்கள், புலவர் பாடல்கள் என யார் விளக்கம் எழுதினாலும் இந்த முப்பத்திரெண்டு வகையான பொருள்களில் ஏதேனும் ஒன்றை கூறிவிடுவார்கள்.

அவர்கள் சென்று எடுக்கும்,அலைவரிசையில் பொருள் மாறுபடுமே அன்றி, அது வேறு அர்த்தம் என கூறமுடியாது.* ஆதலால் அவர் விளக்கம் சரி இவர் விளக்கம் சரி என சண்டையிடாமல் உங்களுக்கு எந்த அலைவரிசையில் கிடைத்த விளக்கம் வேண்டுமோ அதை எடுத்து கொள்ளவும்.

தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் மந்திரமா?

கவி பாடினால் உயிர்போகுமா அது எப்படி?

தமிழை இசையோடு பாடுவதால் அற்புதங்கள் நடந்ததா அது எப்படி?

அடுத்த பதிவில் இதுபோன்று அதிகமான தகவல்களை இன்னும் காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வழ்க வளமுடன் 

October 14, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -18


தமிழும் அகத்தியரும் ஓர் ஆய்வு -3

சென்ற பதிவில் முருகபெருமானை கண்டோம். இந்த பதிவில் அகத்தியர் பற்றிய தகவல் காண்போம்.


அகத்தியர் பெருமான் குடத்தில் இருந்து அவதரித்தவர்.  இவரை உருவக்கியவர் சிவபெருமான் என்கிறார்கள்.அதாவது பனிக்குடத்தில் இருந்து என்றும், இந்த பனிக்குடம் இருள் நிறைந்த இடத்தில் வைக்கபட்டது என்றும், அது கடல் ஆழம் என்றும் அது குளத்தில் வைக்கபட்டது என்றும் பல தகவல்கள் கூறுகிறார்கள்.இவர் பிறந்த நாட்சத்திரம் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்கிறார்கள்.


"நற்றவ *சிவனார்* பெற்ற நற்றவ முனிவனே அகத்தியன்"
                                      _புஜண்டர் நாடி_

"கரியமாலோ அலைகடலில் துயின்றோன்
அலைகடலோ குருமுனியின் கையில் அடக்கம்
குருமுனியோ *கலசத்தில்* பிறந்தோன்"
                                            
                                      _அவ்வையார்_

இப்படி அகத்தியர் பிறப்பு பற்றிய குறிப்புகள் உண்டு எனலாம்.அகத்தியர் நிறைய அகத்தியர் இருந்தார்கள் என சொல்வது ஏற்க முடிவதில்லை ஏனெனில் *கற்ப மருந்து சாப்பிட்டு அவர் பல யுகங்கள் வாழ்ந்தார் என சித்தர்நூல்கள் குறிப்புகள் உள்ளது*.

குறிப்புகள் = கருவூரார் வாதகாவியம் பாடல் 8முதல் 11 வரை

மேலும் அவர் தமிழ் நூல்களை வடமொழிக்கு தருவதற்க்கு சென்றார் எனவும் பின் பிரளய காலத்தை நிறுத்த வடநாட்டில் இருந்து தென்பகுதிக்கு வந்தார் என குறிப்புகள் உள்ளது.(சில குறிப்புகள் பெருநூல்காவியம் 1000த்தில் உள்ளது)

மேலும், அவர் மூன்று தமிழ் சங்கத்திலும் இருந்தார் எனவும், பின் அதுவல்லாமல் சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகைமலையில் தனது பெருநூல் காவியத்தை அரங்கேற்றினார் எனவும் கூறபடுகிறது.

தென்மதுரை தமிழ்சங்கத்தில் எப்படி ஒரு நூல் அரங்கேற்றபடுமோ அதுபோலவே சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகையிலும்,சதுரகிரியிலும் நூல் அரங்கேற்றபடும்.

அகத்தியனார் அகத்தியம் என்ற நூலில் மூன்று தமிழையும் கூறினார்,ஆனால் அது கடல்கோளால் அழிக்கபட்டது இருப்பின் பின் பெருநூல்காவியம் என்ற நூலை இயற்றி பொதிகை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்.

அதுவும் பின்னால் ஆழிபேரலையால் கடல்கொண்டு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது இது ஆறு காண்டங்கள் மட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது.அகத்தியம்➡பன்னீராயிர காவியம் 12000➡போகர் சப்தகாண்டம்7000
இப்படி வந்த நூல் கடைசியாக முழுமையாக உள்ள நூல் போகர் 7000

அகத்தியர் தென்பகுதிக்கு செல்லுவதை அறிவியல் பூர்வமாக கீழே காணலாம்

இதில் குறிக்கபடும் காலமும் தென்மதுரை கடல் கொண்ட காலமும் தோராயமாக ஒன்றாக வருகிறது காண்க

வானவியல் நிபுணரான *வராஹமிஹிரர்* காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.

சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.

கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 22 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது.

பின்பு மீண்டும் கிமு.4600 ல் தென் துருவ நட்சதிரம் 24 டிகிரி ஆனது. இது பொதிகையில் இருந்து காண முடிந்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இதில் தென்மதுரை கடலில் மூழ்கியது தோராயமாக கி.மு 4500 என ஆய்வாலர்கள் கூறுகிறார்கள்.

 *கானோபஸ்* என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் *அகத்திய நட்சத்திரம்* அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று.

 இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.

 எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை! இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

 நல்லது பதிவின் நீளம் கருதி சில சித்தர்கள் பாடல்களை காண்போம் அன்பர்களே

 "குறுமுனி அல்ல அது குரு முனி
தானான குருமுனியா ரென்றுசொல்லி
தன்மையுள்ள சங்கத்தா ரெல்லாருந்தான்
கோனான குருவணக்கம் மிகவுங்கூறி
குவலயத்தி லின்னூல்போல் யார்தான் செய்வார்"
                    பெருநூல் 12000 முதல் காண்டத்தில் எண்700

 பொதிகைமலை சங்கத்தில் கமலமுனி நூல் அரங்கேற்றல் தடுக்கபட்டு பின் சதுரகிரி சங்கத்தில் அரங்கேற்றம் செய்யபட்ட்து

"கேட்டாரெ கமலமுனி தாள்பணிந்து
கிருபையுடன் தென்பொதிகை சபையோர் முன்னே
கூட்டமுடன் அரங்கேற்றல் செய்யவென்று"
                        பாடல் 12000த்தில்3240

"இட்டாரே சித்துமுனி கமலர்தாமும்
யெழிலாக சதுரகிரி மலையோரந்தான்
பட்டயம்போல் வரங்கேற்றல் செய்வதற்கு
பாங்குடனே சம்மதங் கொண்டருளினாரே"
                      பாடல் 12000த்தில்3246

இதன் பாடல்கள் பெருநூல்12000 மூன்றான் காண்ட்த்தில் எண் 240லிருந்து 247வரை சங்கத்தில் அரங்கேற்றம் செய்வதை கூறுகிறது 

"சிறப்புடனே பொதிகைமலை சங்கமப்பா
தீரப்பா நவகோடி சித்துநாதர்
திறமுடனே யெழுதிவைத்த பலகைதானே
பலகையாம் சங்கமென்ற பலகையப்பா"
            பெருநூல் 12000த்தில்பாடல்4024,25

இதன் பாடல்கள் பெருநூல்12000 நான்காம் காண்ட்த்தில் எண் 24லிருந்து 30வரை சங்கத்தில் பலகை மூலம்  செய்வதை கூறுகிறது.

அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பியம் என்பது போல் பெருநூல் 12000த்தின் வழி நூல் போகர் சப்தகாண்டம் 7000 என்பதை போகர் கீழே கூறுகிறார்.

"வருநூலம் அடியேனும் சொன்ன மார்க்கம்
விருப்பமுடன் அகத்தியரும் ஒருநூல் செய்தார்
குருநூல் காவியம் பன்னீர் ஆயிரம் தான்"
               போகர் 7000 பாடல் 4124

இனி அடுத்து மந்திரம் பற்றிய பதிவுகள் வரும் இதில் தமிழ் மொழியே மந்திரமாக செயல்பட்டதையும். புலவர்கள், சித்தர்கள் பயன்படுத்திய முறைகள்,மற்றும் சாபம் கொடுக்கும் முறைகள் என அனைத்தையும் காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

October 13, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -17


தமிழும் முருகனும் ஓர் ஆய்வு -2

சென்ற பதிவில் சிவனாரை கண்டோம் இந்த பதிவில் சுருக்கமாக முருகனை காண்போம்(அனைத்தும் சித்தர்கள் நூலில் இருந்து தொகுக்கபட்ட்து).

பதிவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை பாடலை சுட்டிகாட்டவும் என அன்பர்கள்  கூறியதால் பாடலுடன் விளக்குகிறேன்.


முருகன்

புராண கதைப்படி முருகன் பிறப்பிடம் வடநாடு, கங்கையை ஒட்டிய பகுதி என்றும், நட்சத்திரம் விசாகம் என்றும் கூறுகிறது.

இதை தான் விளக்கமாக ஒரு காண்டத்தின் படலமாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.ஆனால் கந்தனுக்கு விசாகன் என்ற பெயர் இருந்ததாக பாணினி முனிவர் இயற்றிய வியகரணத்திலும்,பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் நூலிலும் கூறுகிறார். இதை கொண்டே விசாகம் நட்சத்திரம் என முடிவு கட்டினர் வடநாட்டவர்.

இதையெல்லாம்(ஒரு ஓரமாக) தனியாக எடுத்து வைத்துவிட்டு சித்தர் நூல்களை ஆராய்வோம்.

முதலில் முருகன் யார் என்றால் அவர் மனிதராக பிறந்தவர் என்றும் அவர் மரபு எதுவென்றால் சைவம் என்ற பீடமாகும். இவர் பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தார்* என போகர் கூறுகிறார்.

பிரணவ ஆய்வில் அதிகம் ஈடுபட்டு மெய்பொருளை அறிந்தவர் என்றும் பின் அந்த மெய்பொருளை ஈசனுக்கும்,அகத்தியருக்கும் தெளிவுற காட்டினார் என்றும்,பின் தான் ஈசன் அதை சரிதான் என உணர்ந்து ஏற்றார் எனவும் கூறுகிறார்கள். பின் காங்கேயம் என்ற ஊரில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். அதனால் அவர் பெயர் காங்கயன் ஆயின.

குமரவேள் என்ற பெயரையும் கொண்டவர் என்று அடியாருக்கு நல்லாரும், முருகவேல் என்ற பெயரை நக்கீரரும் கூறுகின்றனார்.முதல் தமிழ் சங்கத்தில் முருகன் இருந்தார் என இறையனார் அகபொருள் சிறப்புப்பாயிரம் உரையும், தொல்காப்பிய சிறப்புப்பாயிரம் உரையும் கூறுகிறது.

மேலும் அவர் மூன்றுயுகம் கடந்தவர் என பிறந்த நாள் கூறபடுகிறது.

சரி மேலே சொன்ன விளக்கத்திற்க்கு எல்லாம் பாடலாய் சித்தர் பாடலில் காண்போம்.


"செப்பலாம் சுப்பிரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை"
                     போகர் 7000தில் பாடல்-5622

"முத்தான வடிவேலர் முருகரப்பா
முயற்சியுடன் வயததுவும் எது என்றாக்கால்
சத்தியமாய் வயததுவும் , கணக்கோ இல்லை
சார்பான நூல்தனிலும் சொல்லவில்லை "
                       போகர் 7000த்தில் பாடல் -5852 

"ஆறான சுப்பிரமணியர்  மரபேதென்றால்
அப்பனே சைவம் என்ற பீடம் ஆமே"
                போகர் 7000த்தில் பாடல் – 5732 

"துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலர்
துப்புறவாய்ப் பிறந்த்தொரு நேர்மையப்பாசொன்னபடி ஆவணியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால் தான் ஒன்றே"
                       போகர் 7000த்தில் பாடல் -5941 

"சேரர் கொங்கு வை காவூர் நனாடாதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே"
               திரு ஆவினன்குடி திருபுகழ் பாடல்-1 

"கருதவே மும்மூலம் பிரித்துச் சொல்லும்
கருவூரிற் காங்கயனே கருவாய்த் தானே"
                  சுப்பரமணியர் ஞானம் 200ல் பாடல்-31 

"பேரான ஈசனுக்கு இதுதான் சொல்லிப்
பேசாத எழுத்தினூட வரையும் காட்டிச்"
           யோகஞானம் 500ல் பாடல் 13

ஆக எப்படி பார்த்தாலும் முருகன் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. நண்பர்கள் இங்கு ஒன்று வினவலாம் இது எல்லாம் போகர் மட்டும் தான் சொன்னார? 

 இல்லை, இதை அவர் அகத்தியர் நூலானா அகத்தியம் மற்றும் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து பல விடயங்களை விரித்து தன்னுடய சப்தகாண்டம் 7000த்தில் கூறியதாக கூறுகிறார். அதாவது முதல் தமிழ் சங்கத்தில் அகத்தியம் என்ற இலக்கண நூல் வெளியிட்டார்கள் அல்லவா அதிலும் அதற்கு அப்புறம் 12000 என்ற நூல் எழுதியதாகவும் அதுவும் கடல்கோளால் அழிவுற்றது எனவும் கூறுகிறார்.இது பற்றிய தகவலை அகத்தியர் தலைப்பில் காண்போம்.இப்போது அந்த பாடலை காண்போம்
       
"விருப்பமுடன் பாடிவைத்த சத்த காண்டம்
குறைந்ததொரு பொருள் எல்லாம் எந்தன் நாதர்
குருமுனியாம் அகத்தியத்தில் காணலாமே"
                  போகர் 7000த்தில் பாடல்-5693_

"காணலாம் அகத்தியனார் காவியத்தில்
கருவான பன்னீராயிரத்தில் அப்பா"
              போகர்7000த்தில் பாடல்-5694காங்கேயம் *சிவன்மலையில்* முருகன் தங்கி தவம் செய்து, அந்த தவ ஆற்றல் முழுக்க அம்மலையில் வைத்துள்ளார் எனவும் மேலும் *சிவவாக்கிய சித்தர்* அங்கு சமாதியானர் என்றும் அவருடைய ஆற்றல் முழுக்க உள்ள இடமும் என்று என் குருநாதர்களில் ஒருவர் கூறினார்.

சென்னிமலை கந்த சஷ்டி கவசத்தை விளக்கும் இடம். அங்கு சென்று தவம் செய்தால் அதன் மறைமுக விளக்கம் கிடைக்கும் என என்னால் உறுதியாக கூறமுடியும்.அவர் வாசியோகம் செய்பவராக இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

அடுத்த பதிவில் அகத்தியரையும் கண்டு பின் தமிழ் மந்திரத்தின் உள்ளே செல்வோம்

 உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்
October 8, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-16

தமிழும் சிவனும் ஓர் ஆய்வு -1

தமிழ் மொழி உச்சரிப்பு என்பது இலக்கண வரையறையோடு உச்சரிக்கபடும் போது மந்திரமாக வடிவம் எடுத்து நேரடியாக சென்று தாக்கும்.

பெரும்பாலும் மொழி மந்திரமாக உருமாறும்போது நெட்டலைகளாக  உபயோகபடுத்த படுகிறது

இது பாடல் பாடும்போது ஏற்படும் அலையானது நேரடியாக சென்று தாக்குதல் புரிகிறது. இதனை மறைமுகமாக அந்த காலத்தில் வைத்துள்ளனர்.

இது பற்றி காணும் முன் தமிழின் திறம் பற்றி அறியவும் சங்க காலத்தில் இருந்து வருவோம்.

இப்பொழுது நாம் செல்லவேண்டிய காலம், தென்மதுரை இருந்த இடமான குமரிகண்டம் என்ற கண்டத்திற்க்கு இங்கு தான் முதல் தமிழ் சங்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


கடலியல் ஆதாரத்தின் படி இக்கண்டம் கி.மு 8000 என்கிறார்கள். ஆனால் நில ஆய்வாளர்கள் கி.மு 30,000 என்கிறார்கள். நாம் சங்கம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து செல்வோம் அதாவது கி,மு 8000 த்திலிருந்து கி.மு 7000 க்குள் செல்வோம்.

பதிவு மந்திரம் குறித்து என்பதால் இத்தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் மட்டும் பார்ப்போம்.மேலும் அதை வடிவமைத்த நபர்களை பற்றியும் அறிவோம். முதலில், இந்த தமிழ் செவ்வனே வளர காரணமானவர்கள்  சிவன் என்கிற இறையனார்(திரிபுரம் எரித்த விரிசடை கடவுள்),முருகபெருமான்,  மற்றும் அகத்தியர் ஆவார்கள்.

இவர்கள் மூவரையும் ஒரு சிறுகுறிப்பு உடன் கண்டு பதிவுக்குள் செல்வோம்.

 சிவன்

இவர் ஒரு மனிதராக வந்து கடவுளாக மாறியவர் என்று கூறுகிறார்கள். (இதற்க்கு சரியான சான்று இல்லை).

இந்த உலகில் இருவரின் பிறப்பு பற்றிய தகவல்கள் இதுவரை யாருக்கும் சரியாக கிடைக்கவில்லை என்றால், அது இரண்டு நபர்களுக்கு தான் என வரலாறு கூறுகிறது.அதாவது, ஒன்று சிவபெருமான் மற்றொன்று தமிழ் மொழி இந்த இருவரின் பிறப்பும், காலமும் இதுவரை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை.


சிவனால் உருவாக்கபட்டது தான் தமிழ் மொழி. அதனால் தமிழின் காலத்தை ஆய்வு செய்தால் சிவனின் காலமும் அகப்படும் என, தமிழின் காலம் தேடுகின்றனர். அதுவும் சரியான ஆண்டு கிடைத்தபாடு இல்லை.

இரண்டும் சரியான தகவல் கிடைக்காத புதிராகத்தான் உள்ளது.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் “சிவன் என்பவர் வடநாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள் இது உண்மையா?”. இது மிகவும் தவறான கேள்வி.

சிவன் என்பவர் இந்த வடநாடு என்பதற்கு முன்னே தென்னாடு என்ற ஒன்று பெரிய நிலபரப்பை கொண்ட பாண்டிய நாட்டில்(குமரிகண்டம்) இருந்தார்  என ஆய்வுகூறுகிறது.

இவர் மலையில் இருப்பதை அதிகம் விரும்புவர் என்பதால் இவர் இருந்த இடம் மேருமலை என்கிறார்கள்.இது தென்மதுரைக்கு அருகில் இருந்த மலையாகும். ஆக குறிப்பு படி பார்த்தால் இவர் குமரிகண்டத்தில் கிமு 15000 ஆண்டில் அங்கு இருந்தார் எனவும், கிமு.7000 வாக்கில் தமிழ் சங்கத்தில் இருந்தார் எனவும் உள்ளது.

வட மாநிலத்தவர் தற்காலத்தில் எழுதிய  *மெலுகாவின் அமரர்கள்* புத்தகம் கூறும் சிவன் வரலாறு

சிந்து  சமவெளியை  அடிப்படையாக கொண்டது.

 அவர் சிவனின் பிறப்பு பற்றி கூறவில்லை.

முதலில் அவர் புத்தகம் ஆரம்பிக்கும் இடம் *மானசரோவர்* என்ற இடத்தில் இருந்து தான்

அவர் குறிப்புகளின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதினாலும் அவர் ஆரம்பிக்கும் காலம் முதல் பக்கத்தில் கொடுத்து இருப்பார். அதாவது  அவர் சுட்டும் காலம் கிமு 1900 ஆம் ஆண்டு. இந்த காலத்தில் இருந்து தான் அவர் தொடங்குவார் .

நாம் இந்த காலத்தின் அடிப்படை படி கண்டால் *கிமு 4500* வாக்கில் தென்மதுரை மூழ்கியது. இமயத்தின் உயரம் சற்று மேல் எழும்பியது.

சிவபெருமான் தென்மதுரையில் இருந்து  புலம்பெயர்ந்தாலும். 2600 ஆண்டுகள் தென்னாட்டில்(கபாடபுரம்,மதுரை) இருந்து தான் பின் சென்றார் என தெளிவாக தெரியும்

ஆக இது போன்ற நூல்களை வைத்து முடிவு செய்வது தவறு என அறியவும்.

சிவ பெருமான், களவியல் என்ற இலக்கண நூலை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார் எனவும், இதற்கு *இறையனார் அகப்பொருள்* என நூலின் பெயர் உள்ளதாகவும், இதற்கு உரை செய்த நக்கீரனார் கூறுகிறார்.

தமிழ் மொழி தன் இருப்பு குறைந்து பல இடங்களில் பேசபட்டதால் அதை *கொடுந்தமிழ்* என ஆன்றோர்கள் அழைத்தனர்.

தமிழிருந்து உருவக்கபட்ட்து தான் வடமொழி என அறியவும்.அதற்கும் ஒரு வரையறை அளித்தவர் சிவன்(பாணினி முனிவருக்கு அளித்தார்) என்பதால் அவர் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிட்டனர்.

ஆக சிவன் என்பவர், *மாணிக்கவாசகர் சொல்வதுபோல் தென்னாடுடையவர்* என்பது தெளிவாக தெரிகிறது அவருக்கும் தமிழுக்கும் தொடர்பு அதிகம் உள்ளது என புரிகிறது.


அடுத்த பதிவில் முருகபெருமான் மற்றும் அகத்தியர் தென்னாட்டவர் அவர்கள் வடநாடு அல்ல என்பதை பற்றிய விவரங்களை காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை 
ரா.சங்கர்
ஈரோடு


நன்றி
வாழ்க வளமுடன்


தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -15


தமிழும் சமஸ்கிருதமும் ஆய்வு (தமிழ் மந்திர பதிவு ஓர் முன்னுரை)சென்றைய பதிவுகளில் குறைந்தது சமஸ்கிருதத்தின் விளக்கம் மூன்று பதிவுளாக கொடுக்கபட்டுள்ளது.

இனி தமிழில் மந்திரம் எப்படி எல்லாம் உள்ளது எனபதையும், ஆய்வின் தலைப்பை தமிழும் சமஸ்கிருதமும் என்பதை மாற்றி தமிழே ஓர்  மந்திரமொழி என பதிவுகளாக வெளிடுகிறேன்.

இதற்கு குறைந்தது ஐந்து பதிவுகள் வரும் என கூறலாம்.அதற்கு மேலும் வரலாம் இருப்பினும் காலம் கருதி முடிக்கபடும்.

இந்த ஆய்வின், மூலம் ஒரே வரிதான் தமிழே மந்திரமாக செயல்படும் என்பது தான்

இந்த ஆய்வில்

1.சங்க காலத்திற்க்கு நாம் செல்ல வேண்டி வரும்.

2. மறைந்த நூல்களின் சில குறிப்புகள் அறிய வேண்டி வரும்

3.கடலுக்கடியில் இருக்கும் பல நகரங்களை சந்திக்க வேண்டி வரும்.

4.சங்க கால பெண்களின் சக்திகளை காண வரும்,

5.சங்க கால புலவரின் திறமை இருந்த விதம் வெளிப்படும்,

6.சித்தர்களின் தமிழ்மொழி பயன்பாடு

7.சங்க தமிழோடு இசை சேர்ந்து விளையாடிய விதம்

8.குறைந்த எழுத்துகளை கொண்ட மந்திரம்

என அனைத்தும் குறிப்புகளாக கூறி

 காலத்தின் அருமை கருதி சில ரகசியங்களை வெளிபடுத்தியும், சிலதை  விளக்காமல் அவரவர் அனுபவ ஆய்வுக்கே விட்டுவிட வேண்டியதால் பொறுத்தருள வேண்டும்

பல இடங்களில் மேற்கோள் பாடல்கள் காட்டபடும் அதை அன்பர்கள் படித்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் பதிவின் நீளமும் அதிகமாக இருக்கும் என்பதை கூறிவிடுகிறேன்

சில பதிவுகள் வேலை பளுவின் காரணமாக தாமதம் ஆகலாம், சற்று காத்திருக்க வேண்டுகிறேன்

எப்படி இருப்பினும் தமிழ் மொழி பற்றி மறைந்த பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.*

இதற்கு என் அன்னை காயத்திரி தேவியும், மகா குருவான கோரக்கசித்தரும், ஸ்ரீ கண்ணையை யோகியாரின்ஆ சிகளோடும் பதிவிடுகிறேன் என்பதை கூறிகொள்கிறேன்.


அடுத்த பதிவு தமிழே ஓர் மந்திர மொழி - ஓர் ஆய்வு என ஆரம்பம் ஆகும்


உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்