July 13, 2018

தமிழையும் வாசியையும் உருவாக்கியவர் சிவனேஇந்த பதிவின் நோக்கம் தமிழ்மொழியின் காலம் மற்றும் அதை உருவாக்கி உலகுக்கு அளித்தவர் யார்? என நூல்களின் ஆதாரங்களை கொண்டு விளக்குவதேயாகும்.

தமிழ் மொழியானது பல்வேறு சிறப்புகளை கொண்ட மொழியாகும் அம்மொழியை இந்த உலகிற்க்கு தந்தவர் சிவனேயாகும். அம்மொழியே உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்பதற்காண ஆதாரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை
                                   குமரகுருபரர் அருளிய காசிக் கலம்பகம்
மேலே சாதரணமாக தோன்றும் இரண்டு வரிதான் மிகபெரிய ரகசியத்தை எளிமையாக கூறுகிறது அதாவது இந்த உலகத்தை உருவாக்கியவனும் தமிழை தந்தவனும் சிவன் தான் என குமரகுருபர முனிவர் காசி கலம்பகத்தில் கூறுகிறார்.
செந்தமிழ்க் கலைநிலை சீர்நெறித் திருநெறி
                 ஐந்திறம் பாடல் எண்- 845
ஆடலான் நிலைகலை அருளியல் மூலம்
ஆடலான் நெறிக்கலை ஐந்தெழுத் தியல்நெறி
                 ஐந்ததிறம் பாடல் எண்-866
அதாவது ஆடலான் என்கிற சிவனின் அருளால் ஐந்தெழுத்தியல் பற்றிய நெறிகளை தெரிந்து செந்தமிழ் கலைநிலைகளை அறிவது திருநெறியாகும் அதை அருள்பவர் ஆடலான் என்கிற சிவனேயாகும்.
மேலும் இந்த உலகில் தோன்றிய முதல்மொழி தமிழ்மொழி என்பதை திட்டவட்டமாக மயன் முனிவர் தனது ஐந்திற நூலில் கூறுகிறார்.
தென்றிசை எண்டிசை மூலமென் றோர்ந்தே
தென்மொழி பன்மொழி மூலமென் றாய்ந்தே
நன்மொழி உயிர்குல முதன்மொழி தமிழென
             ஐந்திறம் பாடல் எண் -810
இந்த மொழி தோன்றிய இடம் குமரி நாடு என்றும் அந்நாட்டில் கிமு  பதினைந்தாயிரம் ஆண்களுக்கு முன்பே தேன்றி சங்கம் வைத்து தமிழ்நிலைகளையும் கலைகளையும் ஆக்கம் எய்தினர் என்கிறார் மயன் முனிவர் குமரி மாநிலம் என்கிற கடல்கொண்ட தென்னாட்டை பின்வருமாறு கூறுகிறார்

பைந்தமிழ்க் கலைநிலைப் பரப்பியல் ஓர்ந்தே
குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
                    ஐந்திறம் பாடல் எண் -812
    மாநிலம் என்பது மா(பெரிய)-நிலம்
தமிழும் சிவமும் ஒன்றென்பதை கீழே காணுங்கள் நண்பர்களே
இந்த அண்டமும் பிண்டமும் ஒன்று தான் என பல சித்தர்கள் கூறியுள்ளனர். இந்த அண்டம் பிண்டம் என்பது சிவன் நடத்தும் கலையே ஆகும்.இந்த கலையே எழுத்தாகும் இந்த எழுத்தே தமிழாகும். இந்த தமிழே சிவமாகும்.

எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்
                                    வான்மீகர் சூத்திரம்16ல் பாடல்-1
 ஆடலான் கலையே அண்டமும் பிண்டமும்
                 ஐந்திறம் பாடல் எண்-814
தோனுமடா சிவயோகம் வாசியோகம்
 தூக்கவென்றால் தமிழதுதான் வேணும் வேணும்
                   தேரையர் பூசா விதி பாடல்-69
வாசியோகம் சித்திக்க வேண்டுமானால் தமிழை அறிந்திருக்க வேண்டும் தமிழை அறியாமல் சிவத்தை அறிய முடியாது.ஆக வாசியோகம் பயிற்சி செய்யலாம், ஆனால் வாசி சித்திக்காது. கடைசிவரை பயிற்சி செய்து காலம் கழியுமே அன்றி அவருக்கு வாசி சித்தியாகாது அவரை அண்டினோர்க்கும் வாசி வராது அது கடைசி வரை பயிற்சியாக இருந்து முடிந்து விடும். ஆகையால் தமிழின் சூட்சமம் அறியாமல் பயிற்சி செய்வது என்பது, செய்யும் நபருக்கு முன்பிறவி புண்ணியம் இருந்தால் மட்டுமே வாசி கிட்டும் என சொல்லிவிடுதல் சிறப்பே.
சரி நண்பர்களே கீழே அடுத்த பாடலை காணுங்கள்

உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான்.
                   கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/அகத்தியப் படலம் பாடல் எண்-41

இப்பாடலில் சுடர்க்கடவுள் தந்த தமிழ் என கம்பர் நேரடியாகவே
கம்பராமயணத்தில் சிவன் தமிழ்மொழியை அகத்தியனுக்கு தந்தார் என அகத்திய படலத்தில் கூறுகிறார்.

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
                   
                     திருவாசகம் திருஅம்மாணை பாடல் எண்-10

இதில் இனிமையான தமிழை அளிக்கும் தென்பாண்டி நாட்டானே என மாணிக்கவாசகர் தனது திருஅம்மாணை பதிகத்தில் சிவபெருமான் தமிழ் அளித்ததை கூறுகிறார்.மேலும் சிவனை, தென்னாடுடைய சிவனே போற்றி என போற்றி திரு அகவலில் கூறுவதை கவனிக்கவும்

உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க

மாறனும் புலவரும் மயங்குறு காலை

முந்துறும் பெருமறை முளைத்தருள்வாக்கால்

அன்பின் ஐந்தினைஎன்று அறுபது சூத்திரம்

கடல் அமுது எடுத்து கரையில் வைத்துபோல்

பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி, மற்றவர்க்குத்

தெளிதர கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
                               
                            கல்லாடம் 3.ல் எண்10

மேற்கண்ட பாடலில் புலவர்களும் பாண்டியமன்னனும் அகத்தினை 
சார்ந்த இலக்கணத்தில் வியக்கும்படியாக அத்தமிழை திரட்டி நூலாக கொடுத்தவர் தென்னாடு என்கிற குமரிகண்டத்தில் வாழ்ந்த தென்தமிழ் கடவுள் என கூறுகிறார்.

மேலும் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் ஆராய்ந்தவர் நம் அங்கணார் என்ற சிவன் என்பதை சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்
சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
                                                        ----பெரியபுராணம்
இதன் மூலம் தமிழை சிவன் தான் இந்த உலகிற்க்கு தந்தார் என ஆதாரம் கொடுத்துள்ளேன்.மீண்டும் ஒரு அடுத்த தலைப்பில் சந்திக்கிறேன்
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி
வாழ்க வளமுடன்