May 27, 2012

காயத்திரி மந்திரம்

                                

உருவான விதம் 


விஷ்வாமித்திரர் தான் காயத்திரி மந்திரத்தை படைத்தார் மேலும் அவர் சத்திரிய குலத்தை சேர்ந்தவர். சத்திரியர் கூறிய மந்திரத்தை தான் இன்று அந்தணர்கள் கூறுகின்றனர் 


கௌசிகன் என்ற மன்னனுடைய நாட்டில் பஞ்சம் வந்தது. இதை போக்க கௌசிக மன்னன் வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கையான நந்தினி பசுவை கேட்கிறான், வசிஷ்டர் தர மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த கௌசிகன் போர்தொடுத்து தோல்வி அடைகிறான். மேலும் பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி போன்றவை கட்டுப்படும் என்பதால் தவம் இயற்றுகிறான்.சத்திரியானால் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாது என்று வசிஷிடர் கூறுகிறார். இதை வாங்கி காட்டுவதாக சவால் விடுகிறார்.இதனால் கள்ளி செடியின் மேல் தவம் புரிகிறார் இதை கண்ட அன்னை பார்வதி கௌசிகன் முன் தோன்றி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக விளக்கை ஏற்றினால் உன் கவலைகள் தீரும் என்று கூறி மறைந்து விடுகிறார். பின் அங்கிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவில் வந்து பஞ்சமுக விளக்கேற்ற திரி கேட்கிறார் ஆனால் திரி தர மறுத்து விட்டன பூதகனங்கள்.உடனே அங்கிருந்த விளக்கில் ஏறி தனது உடலை தலை ,கை ,கால் என ஐந்து முகத்திலும் ஏற்றி விளக்கு எரிய வைக்கிறான் இதை கண்ட அப்பனும் அம்மையும் அவன் முன்தோன்றி பிரம்மரிஷி பட்டத்தை கொடுகிறார்கள்.இதன் மகிழ்ச்சியின் விளைவாக கௌசிகன் புது மந்திரம் ஓதுகிறான்.அந்த மந்திரத்துக்கு, உடம்பை (காயத்தை )திரியாக்கி கூறியதால் அது காயத்திரி மந்திரம் என்ற பட்டமும் அன்னை கொடுக்கிறாள், மேலும் சத்திரியன் கூறிய இந்த மந்திரத்தை இனி வேதியர்கள் கூறட்டும் என்று வரமும் அளிக்கிறார்கள்.


பிரம்மரிஷி பட்டம் வென்ற கௌசிகன் யாருக்கும் தலை வணங்குவதில்லை என்று கூறுகிறார். இதனால் வசிட்டர் கோபம்கொண்டு நீ ப்ரம்மரிஷி அல்ல என்று ஒதுக்குகிறார்.இதனால் மறுபடியும் கோபம் அடைந்து தவம் இயற்ற செல்கிறார் அவர் போகும் வழியில் ஒரு குழந்தையையும் பெண்ணையும் பார்க்கிறார். பின் அது தன் மகள் சகுந்தலா என்று உணர்ந்து, அவள் அரசனிடம் மோசம் போயிருப்பதை உணர்ந்து அவரிடம் பெண் கேட்க செல்கிறார்.அங்கு பல சோதனைகள் நடக்கிறது இறுதியாக யாருக்கும் தலை வணங்காத கௌசிகன் அங்கு சிரம் தாழ்த்தி, தன் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அங்கு அவர் ஆணவமும் தலை வணங்கியதால் அவர் ரிஷிகளுக்கெல்லாம் ரிஷியான ராஜரிஷி பட்டமும் பெறுகிறார்.அவர்தான் விஸ்வமித்திரர், மக்களுக்காக தவம் இயற்றியதால் விஸ்வமித்திரர் என்று அழைக்கப்பட்டார் விஸ்வம் என்றால் உலகம் என்றும் மித்திரர் என்றால் நண்பர் என்றும் பொருள் படும்

May 18, 2012

தேரையர்

                                   
 காசிவர்மன் என்று ஓர் அரசன். கடுமையான தலைவலியால் நிம்மதியை இழந்து விட்டான். அரண்மனை வைத்தியர்களால் அரசனின் தலைவலியில் அணுவளவைக்கூட குறைக்க முடியவில்லை. இறுதியாக, விஷயம் அகத்தியர் காதுகளுக்குப் போனது. தனது சிஷ்யர்களுடன் அவரும் காசிவர்மனைச் சந்தித்தார். உச்சந்தலையில், அதாவது கபாலத்தில் குடைச்சல் உள்ளது என்று காசிவர்மன் கூறியதை வைத்து, அவனது வியாதி தலைவலியில்லை என்பதை தீர்மானித்துவிட்டார். கபாலத்தில் குடைச்சல் என்றால் கபாலத்தைத் திறந்து பார்த்தால்தான் கண்டறிய முடியும். அனேகமாக கபாலத்தில் வெப்பவாயு,சமயங்களில் மேலேறி பின் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கேயே அடைந்து கிடக்கும். இதுகூட வலியாக வெளிப்படும். அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று அனுமானித்த அகத்தியர், காசிவர்மனின் கபாலத்தை ஒருவகை மெழுகைப் பயன்படுத்தி வலியே இல்லாமல் பிளந்துவிட்டார். உள்ளே பார்த்தவருக்கு, பலத்த ஆச்சரியம். காசிவர்மன் சுவாசிக்கும்போது காற்றோடு காற்றாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு தேரைக்குஞ்சு, மூளைவரை சென்று அங்கே அப்படியே பாறைத்தேரைபோல தங்கிவிட்டது. அதனுடைய அசைவுதான் காசிவர்மன் தலையில் வலியாக உணரப்பட்டிருக்கிறது. தேரையை வெளியே எடுத்து கபாலத்தை மூடினால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் தேரையோ, திறந்த கபாலம் வழியாக வெளிச்சம் பட்டதால் இறுகப் பிடித்துக் கொண்டது. அதைக் குத்தி வெளியே எடுக்கமுனைந்தால், மூளைத்திசுக்கள் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க என்ன வழி என்று தெரியாமல் அகத்தியர் தவித்தபோது, ஒரு சிறு பாத்திரத்தில் நீருடன் கபாலம் அருகில் வந்து நின்ற ராமதேவன், அந்த நீரில் அசைவை உருவாக்க... சிறிது நேரத்தில் தேரை மூளையை விட்டுவிட்டு அப்படியே தண்ணீர்ப் பாத்திரத்துக்கு தானாகத் தாவியது. அகத்தியரும் வேகமாக கபாலத்தை மூடி மெழுகிட்டார். சீடன் ராமதேவனின் இந்த சமயோசிதச் செயல், அகத்தியரை மகிழச் செய்தது. அதே சமயம், தேரையை வெளியேற்றுவதில் அகத்தியரிடம் பாராட்டுப் பெற்றதால், ராமதேவனும் தேரையர் ஆனார், அதன்பின் அகத்தியர் தன் ஆயுர்வேத வைத்யமுறை அவ்வளவிற்கும் அணுக்க சீடராக தேரையரைத்தான் கருதினார். இன்னொரு சம்பவம், தேரையரை வைத்ய சிரோன்மணியாகவே ஆக்கிவிட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது. அதை நீக்கும் வழிவகை தெரியாமல் வைத்ய உலகமே தவித்தது. தேரையர், அகத்தியர் ஆஸ்ரமத்தில் தற்செயலாக அதற்கான மருந்தைக் கண்டறிந்தார். மூலிகைச்சாறினை சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய போது அதன் ஆவி சட்டிக்கு நேர் மேல் உள்ள ஒரு வளைந்த மூங்கிலின் வளைமுனையில் பட்டிட, அந்த வளைந்த முனை பட்டென்று வளைவை விட்டு நேர்பட்டது. சப்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்த தேரையர், அதைப்பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார். மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும். இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின்போது மயானம்வரை வருவது மூங்கிலும்தான்... மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக்கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது. இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளைமூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத்தான் நிமிர்த்தாது? தேரையரும், காய்ச்சிய சாறினை பாண்டிய மன்னனுக்குப் பூசிட, அவனது கூனும் நிமிர்ந்தது. இதனால் அரசன், தேரையரை அகத்தியருக்குச் சமமாக பாவித்தான். இது, அகத்தியரின் மற்ற சிஷ்யர்களுக்குள் பொறாமையை மூட்டியது. அவர்களும் அகத்தியரிடம் கோள் மூட்டினர். அகத்தியரும் தேரையரை அழைத்து, ‘‘இனி உனக்கு என் தயவு தேவையில்லை’’ என்று கூறி, தனித்துச் செயல்படச்சொல்லி அனுப்பிவிட்டார். ஆலமர நிழலில் சிறிய தாவரங்களால் வளரமுடியாது. அதேபோல், தேரையர் தன் அருகில் இருந்தால் வளர முடியாது என்று அகத்தியரும் நினைத்தார். அவர் எண்ணியது மிகச்சரி. தேரையர் தனித்துச் சென்று பல அரிய மருந்துகளைக் கண்டறிந்தார். தன் முனைப்பை நூலாகவும் எழுதினார். பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத வைத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன. ஒருமுறை, வயிற்றுவலி வந்த ஒருவருக்கு அகத்தியர் கொடுத்த மருந்தாலும் குணமாகவில்லை. ஆனால் அதே மருந்தை தேரையர் கொடுத்திட, அவருக்கு குணமாயிற்று. அகத்தியரே, ‘இது எப்படி’ என்று கேட்டு குழம்பி நிற்க, ‘அந்த மருந்தை வாயில் உள்ள எச்சில் மற்றும் பற்களில் உள்ள பாஷாணங்கள் படாமல் வயிற்றில் செலுத்தியதால் வயிற்றுவலி குணமாயிற்று’ என்றார் தேரையர். அவரது இந்த நுட்பம் அகத்தியரை பெரிதும் பரவசப்படுத்திற்று. தேரையரின் புகழ், உலகம் முழுவதும் பரவிட திருவுளம் கொண்டார். அதற்கு ஏற்ப ஒரு காலமும் உருவானது. தேரையர், அகத்தியரைப் பிரிந்து நெடுந்தூரம் சென்று தாடியும் மீசையும் வளர்த்து முற்றாக உருமாறிவிட்ட காலம் அது. அகத்தியருக்கு திடீரென்று கண்பார்வை மங்கியது. அது எதனால் என்பது, திரிகாலஞானியான அகத்தியருக்கும் தெரிந்தது. பூமியில் மனிதப் பிறப்பெடுத்துவிட்டவர்களை பூமியின் வினைப்பாடுகள், கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல் விடுவதேயில்லை. அகத்தியரையும் ஒரு கர்மக்கணக்குதான் கண்ணொளியைக் குறைத்து தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரது தர்மக்கணக்கு, சீடன் தேரையர் வடிவில் அவரை ஆட்கொண்டது. அகத்தியர் பரிபூரண கண்ணொளி பெற ஒரு மூலிகை தேவை. அதை எவர் பறித்தாலும் அங்கே விஷப்புகை கிளம்பி, பறித்தவர் பார்வை பறிபோய்விடும். தேரையர், தன் குருநாதரான அகத்தியருக்காக தன் கண்ணை இழந்தாவது முயல்வாரா... இல்லை வேறு மார்க்கத்தில் செல்வாரா என்று அனைவரும் கவனித்தபோது, தேரையரும் அம்பிகையைச் சரண்புகுந்தார். அதுநாள்வரை இறைவேட்கையை சிறிதாகவும், மருத்துவச் சூரியனாவதை பெரிதாகவும் கொண்டிருந்த தேரையர், குருநாதருக்காக இறை வேட்கையைப் பெரிதாகக் கருதி அம்பிகையைச் சரண்புகுந்து தனக்கு உதவிடும்படி கண்ணீர் மல்கக் கேட்டார். அம்பிகையும் தேரையரிடம் அகத்தியருக்கான மூலிகையைத் தந்து ஆசிர்வதித்துச் சென்றாள். அதன்பின் அகத்தியரின் பார்வையும் முழுமையாகத் திரும்பியது. சீடன் தேரையரை கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினார். 
தேரையர் நூல்கள் :
 தேரையர் யமக வெண்பா
 தேரையர் தரு
 தேரையர் வெண்பா
 தேரையர் காப்பியம்
 தேரையர் அந்தாதி
 தேரையர் கரிசல்
 தேரையர் ம்காகரிசல்
 தேரையர் கற்பம்
 தேரையர் நிகண்டு
 தேரையர் நீர்க்குறி நெய்க்குறி நூல்கள்
 தேரையர் சேகரப்பா
 தேரையர் நாடகம்
 தேரையர் சிகாமணி வெண்பா
 தேரையர் மிகாவண்ணம்
 தேரையர் எதுகைப்பா
 தேரையர் நாண்மால

 தேரையர் தைலவர்க்கச் சுருக்க
 தேரையர் தினக்கிராமலங்காரம்
 தேரையர் சிகிச்சைக்கிரமம்
 தேரையர் நோய் மருந்தளவை
 தேரையர் பிரதானகுணமூலி தரு

 தேரையர் மருத்துவபாரதம்
 தேரையர் வைத்திய பள்ளு
 தேரையர் 500
 தேரையர் வைத்தியகாவியம் 1000
 தேரையர் 1500

May 10, 2012

போகர் ஜீவ(நிர்விகல்ப )சமாதி

 போகர் சமாதி 

போகரின் சமாதி முதலில் அது ஒரு குகையின் நுழைவாயில் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், ஆம் அது முருகன் கருவறைக்கு செல்லும் பாதை.மேலும்  அதன் மேல் ஒரு மரகதலிங்கமும் புவனேஸ்வரி அம்மன் சிலையும் உள்ளது. அது போகர் வைத்து வணங்கியது .போகர் தம் சீடர்களை அழைத்து தாம் நிர்விகல்ப சமாதி ஆகபோவதாக கூறினார். இது தான் நாம் கவனிக்க வேண்டியது நிர்விகல்ப சமாதி என்பது உடலை விட்டு பஞ்சபூதத்துடன் கலந்து இருப்பது. நான் குகைக்குள் சென்று நிர்விகல்ப சமாதி அடைந்த பின்பு இதன் முன்பு நான் வழிபட்டு வந்த இந்த லிங்கமும் புவனேஸ்வரி சிலையையும் இதன் முகப்பில் வைத்து பூஜை செய்து வழிபடவேண்டும் என்றார். மேலும் இந்த கோவிலை புலிப்பாணியின் பொறுப்பில்  விடுவதாகவும் அதன் பூஜை செய்யும் பெறுப்பு அவர் வம்சாவழிக்கு கொடுப்பதாகவும் கூறி உள்ளே சென்றார், தியானத்தில் அமர்ந்தார்.கோரக்கர் சந்திரரேகையில் பின் வருமாறு கூறுகிறார், குகையிலிருந்து யாருக்கும் தெரியாமல் (கோரக்கர்)என்னை போல் உருவம் எடுத்து நாகை என்கிற வடக்கு பொய்கைநல்லூருக்கு வந்தார், பின் அங்குள்ள பூங்கா வந்து  எனக்கு சமாதி ஆகும் வழியையும் கூறி என்னையும்  சமாதி அடையசெய்து பின் பெரிய கடலை தாண்டி மறுதேசம் என்கிற அண்டவெளியில்  கலந்தார் . பின் அங்கிருந்து நமது பூமிக்கு வருவதாகவும் என் சமாதியில் ஜோதிலிங்கம் தானாக தோன்றும் அதன் மூலம் மக்களுக்கு அருள் ஆசி வழங்குவோம் என்றார். மேலும் பழனி கல்வெட்டில் சமாதி அடைந்த இடம் இது என்றும் இதனுள் தான் போகர் கடைசியாக சென்றார் பின் திரும்பி வரவில்லை என்றும் கூறுகிறது. மேலும் இதை தெளிவாக கூறும் வகையில்  சமாதியை (குகையின் நுழைவுவாயிலை )  சுற்றி படங்கள் வரைந்துள்ளனர். மேலும் அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு. சந்திரரேகை 200 ல் 22, 23 மற்றும் 199 ம் பாடல்களில்  கோரக்கரும் இதை தான் கூறுகிறார். அவர் குகையில் இல்லை தற்போது நம்முடன் பஞ்ச பூதத்தில் கலந்துள்ளார் என்பது தெரிகிறது .மேலும் அவர் 2222 ல் வருவதாக கோரக்கரிடம் கூறி சென்றுயிருக்கிறார். இதுவும் சந்திரரேகையில் கூறப்பட்டுள்ளது. படங்கள் இதோ இவை அனைத்தும் பழனியில் உள்ளவை 
போகர் கல்வெட்டு 
புலிப்பாணியிடம் பொறுப்பை ஒப்படைத்தல்    
குகையின் உள்ளே செல்லுதல் 
யோகத்தில் அமருதல் 
                                  

போகர் சமாதி 

May 9, 2012

போகர்

நவ பாஷாணத்தில்  முருகன் 


போகருக்கு 63 சீடர்கள் இருந்தனர் அவற்றுள் முக்கியமான சிலர் புலிபாணி,கோரக்கர்,கருஊரார்,பாபாஜி நாகராஜ்,கொங்கனவர்   இதில் புலிபாணியும்,கோரக்கரும் போகரின் நவ பாஷாண சிலை செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். ஒன்பது பாஷாணத்தில்எட்டுமுடிந்ததது  மீதி உள்ள ஒன்றை கட்டினால்தான்பாஷான விஷம் முறியும். 

மொத்தம் 64 பாஷாணம்.இதில் குறிப்பிட்ட சில பாஷணங்களை கூட்டி ஒரு பாஷண கட்டு  தயாரித்தார் ஒரு பாஷாண கட்டு என்பது 81 மூலிகை கலவைகள் கலந்து விஷத்தை முறித்து வைப்பது.இந்த 81 கலவைகள் என்பது 4448மூலிகைகள் சேர்ந்தது. ஒன்பதாவது பாஷாணத்திற்கு தேவையான மூலிகை அமெரிக்கா,சீனா ரோமாபுரி ஆகியயிடங்களில் இருந்தன அதை எடுக்க போகர் சென்றார்.நாட்கள் பல கடந்தன போகர் வரவில்லை ஒரு நாட்டின் மன்னனாக உள்ளதையும் அவர் உடல் எரிக்கப்பட்டதையும் அறிந்தனர்.

சீடர்கள் இருவரும் சீன தேசம் சென்றனர் அங்கு போகரை கண்டு நடந்ததை கூறி அழைத்து வந்தனர் போகர் தன் பழைய நிலையை மறந்திருந்தார். பின் சீடர்கள் போகரை அங்கிருந்து அழைத்து வந்தனர்   
இப்போது உள்ள கன்னிவாடி என்ற பழநி அருகிலுள்ள மலை பகுதியில் தங்கி மறந்து இருந்ததை மீண்டும் உபதேசம் பெற்றார்  பின் பழைய நிலையை அடைந்து ஒன்பதாவது பாஷாண்ம் கட்டிமுடித்து சிலை செய்தார். தன் கற்று தேற உதவிய தண்டத்தை வைத்து முருகன் சிலையை செய்தார். ஆம் முருகன் கையில் உள்ள அந்த தண்டம் போகருக்கு உதவிய தண்டமாகும் இதையும் பின் நவ பாஷான மூலிகை கட்டாக மாற்றினார்.மேலும் இவருக்கு தண்டாயுதபாணி என்ற பெயரும் வைத்தார்.

இந்த நவ பாஷானம் கட்டுவதில் போகருக்கு போட்டியாக இருந்தவர் மருத்துவ உலகில் அகத்தியருக்கு அடுத்து இருந்தவர் தன்வந்திரி சித்தர். தன்வந்திரிக்கு நிகர் தன்வந்திரி தான் என்றார் அகத்தியர்.  இவரால் எட்டு மட்டுமே முடிக்க முடிந்தது அதற்குள் போகர் ஒன்பதையும் முடித்து வெற்றி கொண்டார் இதனால் கோபமடைந்த தன்வந்திரி எட்டையும் கோவில் குளத்தில் கொட்டிவிட்டார் உடனே மகேஸ்வரன் தோன்றி,"கவலை வேண்டாம் மகனே! அவன் பழனியில் கட்டியதை, பார்த்தால் அதில் வரும் அபிஷேக பொருள்களை உண்டால் நோய் தீரும். நீ கொட்டிய குளத்தில் குளித்தால்       அனைத்து பிணிகளும் தீரும் என்றார் மேலும் நான் இங்கு வைத்தீஸ்வரனாக எழுந்தருளி அருள் புரிவோம் என்றார் அதுதான் வைத்தீஸ்வரன் கோவில். 

இவை அனைத்தும் கோரக்கர் சந்திரரேகை, பழனி தல புராணம், வைத்தீஸ்வரன் தல புராணம், ஆகியவைகளை ஆராய்ந்து மிக சுருக்கமாக கூறினேன்
மேலும் இப்போது உள்ள போகர் சமாதியில் போகர் இல்லை என்பதும் தெரியவந்தது அதை தெளிவாக பதிவு செய்ய  நாளை சந்திக்கிறேன்  

போகர் வரலாறு

                                   போகர் வரலாறு 


அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

மேலும் போகரை பற்றி பல தகவல்கள் ஆராயபோகிறோம் 

May 8, 2012

சிவன்மலை,சென்னிமலை சித்தர் குகைகள்

சிவன்மலை ( சிவாக்கியர் )
                   இங்கு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சிவாக்கியர் வாழ்ந்து  தவநிலை செய்த கோவில் ஆகும்.பெயர்தான் சிவன்மலை ஆனால் குடிகொண்டிருப்பவர் முருகப்பெருமான். இங்குள்ள முருகனின் சிலையை செய்தவர் சிவாக்கியர். இவர் இங்கிருந்து சென்னிமலை வரை குகை மூலம் சென்று அங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு பின் அங்குள்ள இன்னொரு குகை வழியாக பழனி சென்றார் என செப்பேடுகள் கூறுகின்றன. இந்த குகை, கோவில் உள்ளே சிவாக்கியர் தியான நிலை என்பதற்கு கீழ் உள்ளது இதை சிறியதாக அடைத்து வைத்துள்ளார்கள் 

சென்னிமலை (புண்ணாக்கு சித்தர்)


                        இங்கு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான புண்ணாக்கு சித்தர் (புண்ணாக்கிசர்) தன்னை நாடி வரும் பக்தருக்கு அருள் வாக்கு கூறும்போது நாக்கை பின்னுக்கு மடித்து கூறியதால் இவர் பிண்ணாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார் பின் அது மருவி புண்ணாக்கு சித்தர் என மாறியது.மேலும் இவர் நாக்கு பிளவு  பட்டுள்ளதால் பிண்ணாக்கு சித்தர் என்றும் அழைக்கப்படுகிறார்  இவர் சமாதி அடைந்தயிடத்தில் கோவில் கட்டி வழிபடுகின்றனர். மேலும் இவர் பயன்படுத்திய குகை அருகில் உள்ளது. இந்த குகை  மூலம் பழனி செல்லலாம் என செப்பேடுகள் கூறுகின்றது, மேலும் இந்தமலையில்  அமிர்தவல்லி , சுந்தரவல்லி தவம் இருந்து முருகனை திருமணம் செய்ய அருள் பெற்ற இடம் என்றும் கூறுவர். இவர்களின் சிலை ஒரே  கல்லில் செய்திருப்பது சிறப்பு. இதன் பின்புறம் தான் குகை உள்ளது, மேலும் சிறிது  தூரம் சென்றால் சரவண மாமுனிவர் குகை உள்ளது இதன் மூலம் சிவன்மலைக்கு செல்லலாம்.  இந்த சென்னிமலையில் தான்   கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்டது. இதில் ஓர் இடத்தில்" சிரகிரி வேலவா சீக்கிரம் வருக" என வருவது இந்த மலை பெயர்தான்       

May 7, 2012

கொங்கணவர் சித்தர் குகை                                      பொன்னூதிமாமலை 

கொங்கணவர் சித்தர் குகை 

பொன்னுதிமாமலை தான்  சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார். மலையின்இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும்அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து 
மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டுவாசல் என்பர். சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர்வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் 

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

குகையில் நான் 


இவரின் சீடர் செட்டிதம்பிரான்  கொங்கவரை  பூஜித்து அவரின் தரிசனம் கண்டு ,பின் இங்கயே ஜீவ சமாதியானார் .இந்த மலையில் பல மூலிகைகள் உள்ளன.  இதன் அருகில் வட்டமலை உள்ளது இதையும்  கொங்கணகிரி   என்று அழைக்கபடுவர். இந்த இரு மலைமீதும் வந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

May 1, 2012

கஞ்சமலை கற்ப மூலிகைகள்

                                       
கற்ப மூலிகைகள் 
மூலிகை பெயர்கள் 

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.

இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.

கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங் களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள்.

பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.

கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.

முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.

இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக "கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.

பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். 

கஞ்சமலை சித்தேஸ்வரர் ஆலயம்

                                              
மூலவர் சித்தேஸ்வரர் 

சித்தேஸ்வரர் ஆலயம் 

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி 
 கிணறு ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள். 

ராகு தீர்த்தம் 
சக்தி தீர்த்தம், கேது தீர்த்தம் 
உப்பு கிணறு ,நந்தி கிணறு 
நாழி கிணறு 
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர்கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.