மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்.
சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்
2 comments:
அய்யா வணக்கம்,
உங்களது வலை தளம் மிகவும் அருமை நன்று நன்றி
ஒரு சிறிய விண்ணப்பம் கோரக்கர் வசிஷ்டர் முனிவரின் புதல்வர் என்று அகத்தியர் நூலில் குரிப்பிட்டு உள்ளார் தயவு செய்து சரியான தகவலை கூறுங்கள்
நன்றி
சாமி
கோவை
Arputhamana thagaval
Post a Comment