October 15, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-19


தமிழே ஒரு தந்திர மொழி ஆய்வு – 1

நமது மொழியே ஒரு மந்திரமொழி எனபதை கூற முற்படுகிறேன். இதில் அறிவியல் நூல்கள்,சித்தர் நூல்கள்,இலக்கண நூல்கள்,சங்கநூல்கள் என அனைத்தையும் அடிப்படையாக வைத்து, *பவானி சங்கமேஸ்வரர் அருளாலும் மற்றும் குருவருளாலும் கூற முற்படுகிறேன்.*

மந்திரம் என்பது மனோசக்தியோடு பயணிக்க கூடிய ஒலியலைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் குறிப்பாக சில வார்த்தைகள் மட்டும் தான் மந்திரமாக சில மொழிகளில் உள்ளது.

இதற்கு காரணம் அம்மொழியின் இலக்கண கூறும், இசைகூறும் இணைந்து வராததால் தான் என்கிறார்கள்.இந்த இரண்டும் தமிழில் எல்லா எழுத்தோடும் இணைந்து வருவதால் தமிழ் மொழி மந்திரமாக உள்ளது.

ஏனெனில் தமிழ் எழுத்துகள் உயிரோடும், உடலோடும், பிராணனோடும்,இயற்க்கையோடும் இணைந்து பயணிப்பதால் தான் ஒவ்வொரு எழுத்தும் *மந்திர வித்துகளாக* உள்ளது.

உயிர் எழுத்துகள் பற்றிய பதிவை நாம் ஏற்கனவே கண்டோம் ஆதலால் அது எப்படி புலவர்களாலும் சித்தர்களாலும் மறைமுகமாக வெளிபட்ட்து என்பதை காண்போம்.

மந்திரம் என்ற சொல்லை நேரடியாக ஒரு சில இடங்களில் சித்தர்கள் மறைமொழி,பரிபாஷை என்பார்கள். புலவர்கள் சூத்திரம்,நூன்மரபு,இலக்கணம்,மறைமொழிதல் என்று கூறுகிறார்கள். எல்லாம் ஏறக்குறைய ஒரே அர்த்தம் தான். ஆனால் கூறப்படும் சொல் பல அர்த்தம் கொண்டவையாக இருக்கும்.

இந்த மொழி மந்திரமாக சித்தியாக, முதலில் வாசி யோகம் சித்தியாக வேண்டும். வாசி சித்தியாக தமிழ் மொழி தெரியவேண்டும் இரண்டும் பிணைக்க பட்டுள்ளது.

வரலாற்றில் வாசியோகம் செய்யாமல் இயற்கையாக தமிழ் மொழியே வாசியாக சில புலவர்களிடத்திலும் பெண்களிடத்திலும் மந்திர வேலைகளை செய்துள்ளது. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள் அதை அவரவர் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன்.

கூறுகிற மந்திரங்கள் எல்லாம் சித்தியாக மெய்பொருளில் மனம் நின்று கூறினால் மந்திரம் என்கிற மொழி அனைத்துமே வேலை செய்யும் என்கிறார் அகத்தியர்.

பூரணகாவியம் ஆயிரத்தில் கண்டமணிச் சருக்கத்தில்48 வது பாடலில் மந்திரம் பற்றி கீழே

"உருவான செயலறிந்து உருவேசெய்தால்
…………………………………………………
கருவான முதலெழுத்தும் யீரெழுத்துங்
கண்டுமனங் கொண்டுறுதி கனிவாய்நின்றால்
குருவான பதியில் மனங்கூர்மையாகி
கூறுகிற மந்திரங்கள் சித்தியாமே"

இப்படி மனம் கூர்மையாக்கி கூறினால் மொழிகின்ற வார்த்தை மொழிந்த வேலையை செய்யும் என்கிறார் அகத்திய சித்தர்.

சரி அடுத்து புலவர்கள், மந்திரம் பற்றி என்ன சொல்கிறார் என அதையும் தெரிந்து கொள்வோம் கீழே;

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப”
               தொல்காப்பியம்-பொருளதிகாரம்- பாடல் 480

அதாவது நிறைமொழியினையுடைய மனிதர்கள் ஆணையால் வெளிபடும் மறைமொழி தான் *மந்திரம்* என்கிறார் புலவர்.

இப்படி வெளிப்படும் வார்த்தை சரியான உச்சரிப்பு இலக்கண முறை ஆகியவற்றை கொண்டு ஒருவரை செயலிலக்க செய்யமுடியும். இதை இலக்கணத்தில் எங்கு வைத்தார்கள் என்றால் அகத்திணை, புறத்திணையில் வைத்தார்கள்.

இலக்கண நூல்கள் எல்லாமே மறைமுகமாக பல விடயங்களை கூறுகிறது. ஆனால், எல்லாம் பாடல்கள் வடிவிலேயே இருந்து காண்பதால் அதன் சூட்சமம் வெளிப்படுவதில்லை.

அதனை வாசியோக நிலையில் இருந்து மெய்பொருளில் இருந்து, காணததால் அது சாதரணமாக பேசும் மொழியாகவே இன்றைய காலத்தில் பயன்படுகிறது.

ஒரு சூத்திரம் என்பது அதாவது ஒரு சொல்லானாலும் சரி ஒரு வரியானாலும் சரி அது பத்து குற்றமும்(10) இல்லாமல் முப்பத்திரெண்டு(32) உத்திகளோடு கூட்டி சொன்னால் தான் நூல் என ஒத்துகொள்வார்கள்.நமக்கு இங்கு ஒரு உத்தியோடு பொருள் சொல்லுவதே பெரிய விடயமாக உள்ளது.

கீழே தொல்காப்பிய புலவர் பாடலை காண்போம்.

ஒத்த *சூத்திரம்* உரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
*ஈரையுங் குற்றமும்* இன்றி நேரிதின்
*முப்பத் திருவகை உத்தியோடு* புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்
             தொல்காப்பியம் – பொருளதிகாரம் – மரபியல் பாடல்-644

ஆக சித்தர் பாடல்கள், புலவர் பாடல்கள் என யார் விளக்கம் எழுதினாலும் இந்த முப்பத்திரெண்டு வகையான பொருள்களில் ஏதேனும் ஒன்றை கூறிவிடுவார்கள்.

அவர்கள் சென்று எடுக்கும்,அலைவரிசையில் பொருள் மாறுபடுமே அன்றி, அது வேறு அர்த்தம் என கூறமுடியாது.* ஆதலால் அவர் விளக்கம் சரி இவர் விளக்கம் சரி என சண்டையிடாமல் உங்களுக்கு எந்த அலைவரிசையில் கிடைத்த விளக்கம் வேண்டுமோ அதை எடுத்து கொள்ளவும்.

தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் மந்திரமா?

கவி பாடினால் உயிர்போகுமா அது எப்படி?

தமிழை இசையோடு பாடுவதால் அற்புதங்கள் நடந்ததா அது எப்படி?

அடுத்த பதிவில் இதுபோன்று அதிகமான தகவல்களை இன்னும் காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வழ்க வளமுடன் 

No comments: