October 13, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -17


தமிழும் முருகனும் ஓர் ஆய்வு -2

சென்ற பதிவில் சிவனாரை கண்டோம் இந்த பதிவில் சுருக்கமாக முருகனை காண்போம்(அனைத்தும் சித்தர்கள் நூலில் இருந்து தொகுக்கபட்ட்து).

பதிவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை பாடலை சுட்டிகாட்டவும் என அன்பர்கள்  கூறியதால் பாடலுடன் விளக்குகிறேன்.


முருகன்

புராண கதைப்படி முருகன் பிறப்பிடம் வடநாடு, கங்கையை ஒட்டிய பகுதி என்றும், நட்சத்திரம் விசாகம் என்றும் கூறுகிறது.

இதை தான் விளக்கமாக ஒரு காண்டத்தின் படலமாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.ஆனால் கந்தனுக்கு விசாகன் என்ற பெயர் இருந்ததாக பாணினி முனிவர் இயற்றிய வியகரணத்திலும்,பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் நூலிலும் கூறுகிறார். இதை கொண்டே விசாகம் நட்சத்திரம் என முடிவு கட்டினர் வடநாட்டவர்.

இதையெல்லாம்(ஒரு ஓரமாக) தனியாக எடுத்து வைத்துவிட்டு சித்தர் நூல்களை ஆராய்வோம்.

முதலில் முருகன் யார் என்றால் அவர் மனிதராக பிறந்தவர் என்றும் அவர் மரபு எதுவென்றால் சைவம் என்ற பீடமாகும். இவர் பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தார்* என போகர் கூறுகிறார்.

பிரணவ ஆய்வில் அதிகம் ஈடுபட்டு மெய்பொருளை அறிந்தவர் என்றும் பின் அந்த மெய்பொருளை ஈசனுக்கும்,அகத்தியருக்கும் தெளிவுற காட்டினார் என்றும்,பின் தான் ஈசன் அதை சரிதான் என உணர்ந்து ஏற்றார் எனவும் கூறுகிறார்கள். பின் காங்கேயம் என்ற ஊரில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். அதனால் அவர் பெயர் காங்கயன் ஆயின.

குமரவேள் என்ற பெயரையும் கொண்டவர் என்று அடியாருக்கு நல்லாரும், முருகவேல் என்ற பெயரை நக்கீரரும் கூறுகின்றனார்.முதல் தமிழ் சங்கத்தில் முருகன் இருந்தார் என இறையனார் அகபொருள் சிறப்புப்பாயிரம் உரையும், தொல்காப்பிய சிறப்புப்பாயிரம் உரையும் கூறுகிறது.

மேலும் அவர் மூன்றுயுகம் கடந்தவர் என பிறந்த நாள் கூறபடுகிறது.

சரி மேலே சொன்ன விளக்கத்திற்க்கு எல்லாம் பாடலாய் சித்தர் பாடலில் காண்போம்.


"செப்பலாம் சுப்பிரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை"
                     போகர் 7000தில் பாடல்-5622

"முத்தான வடிவேலர் முருகரப்பா
முயற்சியுடன் வயததுவும் எது என்றாக்கால்
சத்தியமாய் வயததுவும் , கணக்கோ இல்லை
சார்பான நூல்தனிலும் சொல்லவில்லை "
                       போகர் 7000த்தில் பாடல் -5852 

"ஆறான சுப்பிரமணியர்  மரபேதென்றால்
அப்பனே சைவம் என்ற பீடம் ஆமே"
                போகர் 7000த்தில் பாடல் – 5732 

"துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலர்
துப்புறவாய்ப் பிறந்த்தொரு நேர்மையப்பாசொன்னபடி ஆவணியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால் தான் ஒன்றே"
                       போகர் 7000த்தில் பாடல் -5941 

"சேரர் கொங்கு வை காவூர் நனாடாதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே"
               திரு ஆவினன்குடி திருபுகழ் பாடல்-1 

"கருதவே மும்மூலம் பிரித்துச் சொல்லும்
கருவூரிற் காங்கயனே கருவாய்த் தானே"
                  சுப்பரமணியர் ஞானம் 200ல் பாடல்-31 

"பேரான ஈசனுக்கு இதுதான் சொல்லிப்
பேசாத எழுத்தினூட வரையும் காட்டிச்"
           யோகஞானம் 500ல் பாடல் 13

ஆக எப்படி பார்த்தாலும் முருகன் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. நண்பர்கள் இங்கு ஒன்று வினவலாம் இது எல்லாம் போகர் மட்டும் தான் சொன்னார? 

 இல்லை, இதை அவர் அகத்தியர் நூலானா அகத்தியம் மற்றும் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து பல விடயங்களை விரித்து தன்னுடய சப்தகாண்டம் 7000த்தில் கூறியதாக கூறுகிறார். அதாவது முதல் தமிழ் சங்கத்தில் அகத்தியம் என்ற இலக்கண நூல் வெளியிட்டார்கள் அல்லவா அதிலும் அதற்கு அப்புறம் 12000 என்ற நூல் எழுதியதாகவும் அதுவும் கடல்கோளால் அழிவுற்றது எனவும் கூறுகிறார்.இது பற்றிய தகவலை அகத்தியர் தலைப்பில் காண்போம்.இப்போது அந்த பாடலை காண்போம்
       
"விருப்பமுடன் பாடிவைத்த சத்த காண்டம்
குறைந்ததொரு பொருள் எல்லாம் எந்தன் நாதர்
குருமுனியாம் அகத்தியத்தில் காணலாமே"
                  போகர் 7000த்தில் பாடல்-5693_

"காணலாம் அகத்தியனார் காவியத்தில்
கருவான பன்னீராயிரத்தில் அப்பா"
              போகர்7000த்தில் பாடல்-5694



காங்கேயம் *சிவன்மலையில்* முருகன் தங்கி தவம் செய்து, அந்த தவ ஆற்றல் முழுக்க அம்மலையில் வைத்துள்ளார் எனவும் மேலும் *சிவவாக்கிய சித்தர்* அங்கு சமாதியானர் என்றும் அவருடைய ஆற்றல் முழுக்க உள்ள இடமும் என்று என் குருநாதர்களில் ஒருவர் கூறினார்.

சென்னிமலை கந்த சஷ்டி கவசத்தை விளக்கும் இடம். அங்கு சென்று தவம் செய்தால் அதன் மறைமுக விளக்கம் கிடைக்கும் என என்னால் உறுதியாக கூறமுடியும்.அவர் வாசியோகம் செய்பவராக இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

அடுத்த பதிவில் அகத்தியரையும் கண்டு பின் தமிழ் மந்திரத்தின் உள்ளே செல்வோம்

 உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்




October 8, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம்-16

தமிழும் சிவனும் ஓர் ஆய்வு -1

தமிழ் மொழி உச்சரிப்பு என்பது இலக்கண வரையறையோடு உச்சரிக்கபடும் போது மந்திரமாக வடிவம் எடுத்து நேரடியாக சென்று தாக்கும்.

பெரும்பாலும் மொழி மந்திரமாக உருமாறும்போது நெட்டலைகளாக  உபயோகபடுத்த படுகிறது

இது பாடல் பாடும்போது ஏற்படும் அலையானது நேரடியாக சென்று தாக்குதல் புரிகிறது. இதனை மறைமுகமாக அந்த காலத்தில் வைத்துள்ளனர்.

இது பற்றி காணும் முன் தமிழின் திறம் பற்றி அறியவும் சங்க காலத்தில் இருந்து வருவோம்.

இப்பொழுது நாம் செல்லவேண்டிய காலம், தென்மதுரை இருந்த இடமான குமரிகண்டம் என்ற கண்டத்திற்க்கு இங்கு தான் முதல் தமிழ் சங்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


கடலியல் ஆதாரத்தின் படி இக்கண்டம் கி.மு 8000 என்கிறார்கள். ஆனால் நில ஆய்வாளர்கள் கி.மு 30,000 என்கிறார்கள். நாம் சங்கம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து செல்வோம் அதாவது கி,மு 8000 த்திலிருந்து கி.மு 7000 க்குள் செல்வோம்.

பதிவு மந்திரம் குறித்து என்பதால் இத்தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் மட்டும் பார்ப்போம்.மேலும் அதை வடிவமைத்த நபர்களை பற்றியும் அறிவோம். முதலில், இந்த தமிழ் செவ்வனே வளர காரணமானவர்கள்  சிவன் என்கிற இறையனார்(திரிபுரம் எரித்த விரிசடை கடவுள்),முருகபெருமான்,  மற்றும் அகத்தியர் ஆவார்கள்.

இவர்கள் மூவரையும் ஒரு சிறுகுறிப்பு உடன் கண்டு பதிவுக்குள் செல்வோம்.

 சிவன்

இவர் ஒரு மனிதராக வந்து கடவுளாக மாறியவர் என்று கூறுகிறார்கள். (இதற்க்கு சரியான சான்று இல்லை).

இந்த உலகில் இருவரின் பிறப்பு பற்றிய தகவல்கள் இதுவரை யாருக்கும் சரியாக கிடைக்கவில்லை என்றால், அது இரண்டு நபர்களுக்கு தான் என வரலாறு கூறுகிறது.அதாவது, ஒன்று சிவபெருமான் மற்றொன்று தமிழ் மொழி இந்த இருவரின் பிறப்பும், காலமும் இதுவரை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை.


சிவனால் உருவாக்கபட்டது தான் தமிழ் மொழி. அதனால் தமிழின் காலத்தை ஆய்வு செய்தால் சிவனின் காலமும் அகப்படும் என, தமிழின் காலம் தேடுகின்றனர். அதுவும் சரியான ஆண்டு கிடைத்தபாடு இல்லை.

இரண்டும் சரியான தகவல் கிடைக்காத புதிராகத்தான் உள்ளது.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் “சிவன் என்பவர் வடநாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள் இது உண்மையா?”. இது மிகவும் தவறான கேள்வி.

சிவன் என்பவர் இந்த வடநாடு என்பதற்கு முன்னே தென்னாடு என்ற ஒன்று பெரிய நிலபரப்பை கொண்ட பாண்டிய நாட்டில்(குமரிகண்டம்) இருந்தார்  என ஆய்வுகூறுகிறது.

இவர் மலையில் இருப்பதை அதிகம் விரும்புவர் என்பதால் இவர் இருந்த இடம் மேருமலை என்கிறார்கள்.இது தென்மதுரைக்கு அருகில் இருந்த மலையாகும். ஆக குறிப்பு படி பார்த்தால் இவர் குமரிகண்டத்தில் கிமு 15000 ஆண்டில் அங்கு இருந்தார் எனவும், கிமு.7000 வாக்கில் தமிழ் சங்கத்தில் இருந்தார் எனவும் உள்ளது.

வட மாநிலத்தவர் தற்காலத்தில் எழுதிய  *மெலுகாவின் அமரர்கள்* புத்தகம் கூறும் சிவன் வரலாறு

சிந்து  சமவெளியை  அடிப்படையாக கொண்டது.

 அவர் சிவனின் பிறப்பு பற்றி கூறவில்லை.

முதலில் அவர் புத்தகம் ஆரம்பிக்கும் இடம் *மானசரோவர்* என்ற இடத்தில் இருந்து தான்

அவர் குறிப்புகளின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதினாலும் அவர் ஆரம்பிக்கும் காலம் முதல் பக்கத்தில் கொடுத்து இருப்பார். அதாவது  அவர் சுட்டும் காலம் கிமு 1900 ஆம் ஆண்டு. இந்த காலத்தில் இருந்து தான் அவர் தொடங்குவார் .

நாம் இந்த காலத்தின் அடிப்படை படி கண்டால் *கிமு 4500* வாக்கில் தென்மதுரை மூழ்கியது. இமயத்தின் உயரம் சற்று மேல் எழும்பியது.

சிவபெருமான் தென்மதுரையில் இருந்து  புலம்பெயர்ந்தாலும். 2600 ஆண்டுகள் தென்னாட்டில்(கபாடபுரம்,மதுரை) இருந்து தான் பின் சென்றார் என தெளிவாக தெரியும்

ஆக இது போன்ற நூல்களை வைத்து முடிவு செய்வது தவறு என அறியவும்.

சிவ பெருமான், களவியல் என்ற இலக்கண நூலை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார் எனவும், இதற்கு *இறையனார் அகப்பொருள்* என நூலின் பெயர் உள்ளதாகவும், இதற்கு உரை செய்த நக்கீரனார் கூறுகிறார்.

தமிழ் மொழி தன் இருப்பு குறைந்து பல இடங்களில் பேசபட்டதால் அதை *கொடுந்தமிழ்* என ஆன்றோர்கள் அழைத்தனர்.

தமிழிருந்து உருவக்கபட்ட்து தான் வடமொழி என அறியவும்.அதற்கும் ஒரு வரையறை அளித்தவர் சிவன்(பாணினி முனிவருக்கு அளித்தார்) என்பதால் அவர் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிட்டனர்.

ஆக சிவன் என்பவர், *மாணிக்கவாசகர் சொல்வதுபோல் தென்னாடுடையவர்* என்பது தெளிவாக தெரிகிறது அவருக்கும் தமிழுக்கும் தொடர்பு அதிகம் உள்ளது என புரிகிறது.


அடுத்த பதிவில் முருகபெருமான் மற்றும் அகத்தியர் தென்னாட்டவர் அவர்கள் வடநாடு அல்ல என்பதை பற்றிய விவரங்களை காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை 
ரா.சங்கர்
ஈரோடு


நன்றி
வாழ்க வளமுடன்


தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -15


தமிழும் சமஸ்கிருதமும் ஆய்வு (தமிழ் மந்திர பதிவு ஓர் முன்னுரை)



சென்றைய பதிவுகளில் குறைந்தது சமஸ்கிருதத்தின் விளக்கம் மூன்று பதிவுளாக கொடுக்கபட்டுள்ளது.

இனி தமிழில் மந்திரம் எப்படி எல்லாம் உள்ளது எனபதையும், ஆய்வின் தலைப்பை தமிழும் சமஸ்கிருதமும் என்பதை மாற்றி தமிழே ஓர்  மந்திரமொழி என பதிவுகளாக வெளிடுகிறேன்.

இதற்கு குறைந்தது ஐந்து பதிவுகள் வரும் என கூறலாம்.அதற்கு மேலும் வரலாம் இருப்பினும் காலம் கருதி முடிக்கபடும்.

இந்த ஆய்வின், மூலம் ஒரே வரிதான் தமிழே மந்திரமாக செயல்படும் என்பது தான்

இந்த ஆய்வில்

1.சங்க காலத்திற்க்கு நாம் செல்ல வேண்டி வரும்.

2. மறைந்த நூல்களின் சில குறிப்புகள் அறிய வேண்டி வரும்

3.கடலுக்கடியில் இருக்கும் பல நகரங்களை சந்திக்க வேண்டி வரும்.

4.சங்க கால பெண்களின் சக்திகளை காண வரும்,

5.சங்க கால புலவரின் திறமை இருந்த விதம் வெளிப்படும்,

6.சித்தர்களின் தமிழ்மொழி பயன்பாடு

7.சங்க தமிழோடு இசை சேர்ந்து விளையாடிய விதம்

8.குறைந்த எழுத்துகளை கொண்ட மந்திரம்

என அனைத்தும் குறிப்புகளாக கூறி

 காலத்தின் அருமை கருதி சில ரகசியங்களை வெளிபடுத்தியும், சிலதை  விளக்காமல் அவரவர் அனுபவ ஆய்வுக்கே விட்டுவிட வேண்டியதால் பொறுத்தருள வேண்டும்

பல இடங்களில் மேற்கோள் பாடல்கள் காட்டபடும் அதை அன்பர்கள் படித்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் பதிவின் நீளமும் அதிகமாக இருக்கும் என்பதை கூறிவிடுகிறேன்

சில பதிவுகள் வேலை பளுவின் காரணமாக தாமதம் ஆகலாம், சற்று காத்திருக்க வேண்டுகிறேன்

எப்படி இருப்பினும் தமிழ் மொழி பற்றி மறைந்த பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.*

இதற்கு என் அன்னை காயத்திரி தேவியும், மகா குருவான கோரக்கசித்தரும், ஸ்ரீ கண்ணையை யோகியாரின்ஆ சிகளோடும் பதிவிடுகிறேன் என்பதை கூறிகொள்கிறேன்.


அடுத்த பதிவு தமிழே ஓர் மந்திர மொழி - ஓர் ஆய்வு என ஆரம்பம் ஆகும்


உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்