August 26, 2014

ப்ராணாயாமம்

இது ஒரு பேஸ்புக் பதிவு
நாடி சுத்தி ப்ராணாயமம்

நாம் பிறந்தது முதல் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றாலும் அதை ஒழுங்கு படுத்துவது (அ) மாற்றங்களை கடைபிடிப்பது அவசியமாக இருக்கிறது. அதை யோகியர்கள் கடைபிடித்து, தனக்குத் தானே ஆராய்ந்து தெளிவு பெற்று நமக்குச் சொன்னார்கள். மூச்சு என்றால் மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும். உள்ளே இழுத்தல்(பூரகம்), வெளியே விடுதல்(ரோசகம்), உள்ளே நிறுத்தி வைப்பது(இதை நாம் கடை பிடிப்பது இல்லை). இழுத்து உடனே வெளியேற்றி விடுகிறோம். இதனால் மூச்சின் மூலமாக நமக்கு கிடைக்கும் ப்ராண சக்தி மிகக்குறைவாகவே கிடைக்கிறது. எனவே உள்ளே வைப்பதற்கான(கும்பகம்) பயிற்சியை நாம் தெரிந்து கொள்வது மிகமிக அவசியமான ஒன்று.
வெளியே காற்றை விட்ட பிறகு உள்ளே இழுக்காமலும் கும்பகம் செய்வார்கள். அதை கேவல கும்பகம் என்று சொல்வார்கள். பூரக, ரேசகங்களுடன் செய்யும் கும்பகத்தை சஹீத கும்பகம் என்பார்கள். சஹீத கும்பகத்தில் நல்ல பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கேவல கும்பகம் ஏற்படடும். அது அனுபவத்தினால் உண்டாகும். இந்த கேவல கும்பகத்தினால் மூலசக்தி எழும்பும்.முன்னேற்றமடைய அடைய சுக்ஷும்னா நாடியில் உள்ள தடைகள் நீங்கி, நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் ஏற்படும்.

ப்ரும்ம முகூர்த்தம், அதிகாலை, மாலை,முன் இரவு, பின் இரவு வேளைகளில் பயிற்சி மேற்க்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நாடி சுத்தி என்பது பயிற்சி மேற்கொள்வதற்கு முன் செய்யப்படுவது. இது அவசியமானதாகும். அதாவது வலது மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து சீராக மெதுவாக இடது மூக்கின் வழியாக விட வேண்டும். பிறகு இடது மூக்கின் வழியாக இழுத்து வலது மூக்கின் வழியாக விட வேண்டும் இது ஒரு சுற்று. இப்படி 10 நிமிடங்கள் செய்யலாம். இழுத்து விடும் காலளவு மாறாமல் இருக்க ஏதாவது மந்திரங்களை மனதுக்குள் சொல்லிப் பழகலாம். இதில் கும்பகம் கிடையாது. நன்றாக நிமிர்ந்து அமர்ந்து புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு செய்வது நல்லது. இது நாடிகளின் அடைப்பை நீக்கும், இரத்தத்தை சுத்தப் படுத்தும். சுவாசம் சீராகும். உடல் லேசாக இருப்பது போல் தோன்றும், பளபளப்பாகவும்,மென்மையாகவும் மாறும்.

முக்கியமான 10 ப்ராணாயாமங்களை பாருங்கள்.


1 - சூர்ய பேதா - உங்களுக்கு சௌகர்யமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மூன்று விரல்களால் இடது மூக்கை அழுத்தி மூடிக் கொண்டு சிரமமில்லாத அளவுக்கு வலது மூக்கின் வழியாக காற்றை மெதுவாக, ஒரே சீராக இழுக்க வேண்டும். காற்றை உள்ளே சிரமமில்லாத அளவு நிரப்பிக் கொண்டு, முகவாய்கட்டை மார்பில் படும்படித் தலையைக் குனிந்து கொண்டு, மூச்சை உள்ளேயே வைத்திருக்கவும். வியர்வை அரும்பும் வரை வைத்திருந்து, வலது மூக்கை மூடிக் கொண்டு இடது மூக்கின் வழியே மெல்ல காற்றை வெளியே விடவும்.பழகப்பழக காற்றை உள்ளே நிறுத்தும் கால அளவை அதிகரிக்கலாம்.
இதனால் கபாலம் சுத்தமாகும், குடல் புழுக்கள் வெளியேறும், கபம் நீங்கும், நரம்புகள் பலம் பெறும், சைனஸ் குணமாகும். குண்டலினி கிளம்ப உதவும். 


இது உஷ்ணத்தை தருவதால் குளிர் காலத்தில் செய்வது நல்லது.

2- கபாலபதி - எதாவது சௌகர்யமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, முலங்கால்களில் கைகளை ஊன்றிக் கொண்டு, இடது பக்கம் மூடி வலது பக்கமாகவோ, வலது பக்கம் மூடி இடது பக்கமாகவோ, அல்லது இரண்டும் சேர்த்தோ சத்தத்துடன் மூச்சை இழுத்து துருத்தி போல புஸ் புஸ் என்று உதற வேண்டும். ஒரு முறை காற்றை இழுத்து பத்து முறை சத்தத்துடன் விரைந்து வெளியேற்ற வேண்டும். படிப்படியாக வெளியேற்றும் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும்.


இதனால் கபாலமான தலை தூய்மையடையும். சுவாச உறுப்புகள் சுத்தமாகும். நூரையீரலுக்கு அதிக காற்று கிடைக்கும்.

ப்ராணாயமம்

3 - உஜ்ஜயி
- சுகாசனத்தில் அமர்ந்து வாயை மூடிக் கொண்டு இரண்டு துவாரத்தினாலும் மூச்சை இழுத்து இதயத்திலிருந்து தொண்டை வரையுள்ள பகுதிகளில் ஓசையாக நிரப்பிக் கொண்டு, முடிந்தவரை வைத்திருந்து, வலதை அடைத்து இடது புறமாகவும், இடதை அடைத்து வலது புறமாகவும், மெதுவாக மாறி மாறி விட வேண்டும். மூச்சிழுக்கும் போது குரல்வளை ஒடுக்கி அடைக்கப் படுவதால் ஒருவிதமான ஓசை உண்டாகும். இந்த பயிற்சியை நடந்து கொண்டோ, நின்று கொண்டோ கூட செய்யலாம். தொண்டை பகுதியால் மூய்யை இழுக்க வேண்டும். இதனால் மண்டையில் சூடு குறையும், அழகு கூடும், ஜீரணசக்தி கூடும்,மூச்சுக் கோளாறுகள் நீங்கும், ஆஸ்த்துமா குணமாகும்.

4 - சீதளி - சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, இரண்டு உதடுகளுக்கும் மத்தியில் வெளிப்புறமாக நாக்கை குழல் போல உருட்டி வைத்துக் கொண்டு, ஸ்..... என்ற ஒலியுடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். முடிந்தவரை உள்ளே வைத்திருந்து மூக்கு வழியாக வெளியே விட வேண்டும். பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

இதனால் உஷ்ணம் குறையும். பித்தம் குறையும். இரத்த சத்தி ஏற்படும். நல்ல பசி எடுக்கும். அஜீரணம், மூலநோய்கள் குணமாகும். தோல் வியாதிகள் நீங்கும். இதைப் பழகுபவர்களை பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகள் பாதிப்பகதில்லை.


5 - சீத்காரி - அமர்ந்தபடி இரண்டு வரிசைப் பற்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு, நாக்கை மேலண்ணத்தில் மடித்து வைத்துக் கொண்டு,காற்றை ஸ்...... என்ற ஓசையுடன் சிரமமில்லாமல் உறிஞ்ச வேண்டும். முடிந்தவரை வைத்திருந்து பிறகு மெதுவாக மூக்கு வழியாக வெளியே விட வேண்டும்.


இதனால் முகம் வசீகரமாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்ல உதவும். தேகம் பலமுடையதாகும்.


6 - பஸ்திரிகா - மூச்சை இழுத்து மார்புப் பகுதியில் நிறைத்து, மார்பை துருத்தி போல் இயக்கி, மூக்கால் விரைந்து விரைந்து குறுகிய மூச்சாக விட்டு, இறுதியாக காற்றை உள்ளே இழுத்து முடிந்தவரை வைத்திருந்து,


மெதுவாக மூக்கு வழியாக விட வேண்டும். ஸ்... ,ஸ்... என்ற சத்தத்துடன் விட்டு பழக வேண்டும். இது ஒரு சுற்று. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை பயிற்சி மேற்கொள்ளலாம். ஒரு சுற்றுக்கும் அடுத்த சுற்றுக்கும் இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் இரண்டு துவாரங்கள் வழியாகவும் பழகியபின் வலதும், இடதும் மாறி மாறி(வலதில் இழுத்து இடதிலும், இடதில் இழுத்து வலதிலும்) பயிற்சி செய்யலாம்.


இதனால் மூச்சுப் பைக்குள் இருக்கும் சர்ப்ப நாடி ஒழுங்கு படுத்தப்பட்டு சுவாசம் சம்மந்தமான யோய்கள் வராது. ஆஸ்த்துமா, நுரையீரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். கபத்தை துடைத்தெறியும்.சில யோகாதார முடிச்சுகளை அவிழ்த்து குண்டலினி எழும்ப உதவும். வாயு நீங்கும். குளர் காலத்தில் உடலுக்கு வெப்பமளிக்கும்.


7 - மூர்ச்சா - சுகாசனத்தில் அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளே காற்றை நிறுத்தியபடி ஜலந்திர பந்தமும், மூலபந்தமும் போட வேண்டும். நினைவிழக்கும்வரை கும்பகம் செய்ய வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும்.


இதனால் உணர்வற்ற நிலையில் ஒரு சுகம் காணும். மூளை பலம் பெறும், தெளிவாகும்.


8 - பிரமரி - எதாவது வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு காற்றை உள் இழுத்து, கும்பகம் செய்து, வண்டு ரீங்காரம் செய்வது போன்று ம்....................................... என்ற சத்தத்துடன் மூச்சை விடவேண்டும். இடைவிடாது விட வேண்டும்.


இதனால் உச்சந்தலை அதிர்வடைந்து சகஸ்ராரம் தூண்டப்படும்.


9 - பிளவினி - காற்றை தண்ணீர் போல பாவித்து குடித்து வயிற்றை நிரப்ப வேண்டும். பானை போல வயிறு உப்பிவிடும். கும்பகம் செய்ய வேண்டும். உட்டியாணா பந்தத்தால் வயிற்றை இறுக்கி மெல்ல எல்லா காற்றையும் வெளியேற்ற வேண்டும். இது மிகக்கடினமான பயிற்சி. ஆசான் இல்லாமல் இது செய்யக் கூடாது. கற்றுக் கொள்வதே மிகக் கடினமாகும்.


உணவு இன்றி காற்றாலேயே நீண்ட நாட்கள் ஜீவிக்க உதவும். தண்ணீரில் மிதக்கலாம்.

10வதாக அந்தர்யாமம் இது கை தேர்ந்த யோகிகளால் செய்யக் கூடியது. இதனால் ஆறு ஆதாரங்களில் ஏதாவது ஒரு ஆதாரத்தினால் ப்ராணனை நேரடியாக இழுத்துக் கொள்ள முடியும்.

மீண்டும் சொல்கிறேன் குரு இல்லாமல் கும்பகம் செய்யவேண்டாம். நம்முடைய வாழ்க்கை முறைக்கு தகுதியான, தேவையான பயிற்சிகளை குரு மூலமாக கற்றுக் கொண்டு, ஆரோக்யமாகவும், அறிவு செறிந்தவர்களாகவும், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்.





நன்றி

மௌனத்தின் நாதம்


ராம் மனோகர்