May 7, 2012

கொங்கணவர் சித்தர் குகை



                                      பொன்னூதிமாமலை 

கொங்கணவர் சித்தர் குகை 

பொன்னுதிமாமலை தான்  சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார். மலையின்இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும்அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து 
மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டுவாசல் என்பர். சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர்வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் 

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

குகையில் நான் 


இவரின் சீடர் செட்டிதம்பிரான்  கொங்கவரை  பூஜித்து அவரின் தரிசனம் கண்டு ,பின் இங்கயே ஜீவ சமாதியானார் .இந்த மலையில் பல மூலிகைகள் உள்ளன.  இதன் அருகில் வட்டமலை உள்ளது இதையும்  கொங்கணகிரி   என்று அழைக்கபடுவர். இந்த இரு மலைமீதும் வந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

May 1, 2012

கஞ்சமலை கற்ப மூலிகைகள்

                                       
கற்ப மூலிகைகள் 
மூலிகை பெயர்கள் 

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.

இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.

கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங் களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள்.

பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.

கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.

முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.

இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக "கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.

பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். 

கஞ்சமலை சித்தேஸ்வரர் ஆலயம்

                                              
மூலவர் சித்தேஸ்வரர் 

சித்தேஸ்வரர் ஆலயம் 

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி 
 கிணறு ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள். 

ராகு தீர்த்தம் 
சக்தி தீர்த்தம், கேது தீர்த்தம் 
உப்பு கிணறு ,நந்தி கிணறு 
நாழி கிணறு 
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர்கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.